ஷாட் ரெடி… நிஜம் பழகு: வாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுதல்!

Published On:

| By Balaji

ஈரோடு கதிர்

“ஏன்? – இதுதான் மனிதர்கள் என்னிடம் அதிகம் கேட்ட கேள்வி!”

“ஏன், எதற்காக, ஏன் கயிற்றின் மேல் நடக்கிறே? தலைவிதியை ஏன் சீண்டுறே? ஏன் மரணத்திற்கான ஆபத்தை வரவழைக்கிறே!?”

“நான் இதுதான் வழியென்று நினைக்கவில்லை. நான் மரணம் என்ற சொல்லைக்கூடச் சொல்வதில்லை. இப்போது ஒருமுறை இல்லை மூன்று முறை சொல்லிவிட்டேன். கவனியுங்கள், இனிமேல் அந்தச் சொல்லை நான் சொல்ல மாட்டேன். மாற்றாக அதற்கு எதிர்ச்சொல்லான ‘வாழ்வு’ என்பதையே சொல்வேன். எனக்குக் கயிற்றின் மேல் நடப்பதுதான் வாழ்க்கை.”

நியூயார்க்கில் சுதந்திரதேவி சிலையின் உச்சியில் நின்று ப்லிப் பேசும் இந்த வசனத்தின் வழியே தன்னுடைய ஆச்சரியமிகு சாதனை வாழ்வை நோக்கி நம்மை இழுக்கிறார்.

**வாழ்வைப் புரட்டிப் போடும் காலம்**

மனித வாழ்க்கையின் பெரும் சுவாரஸ்யம் யார், எது, எப்போது, எவ்விதம் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள் எனத் தெரியாததுதான். கோட்டைபோல் உயர உயர எழுப்பிக்கொண்டே இருக்கலாம். அடித்தளத்தில் ஒரு சிறு பிழை, நெகிழ்வு அல்லது நகர்வு போதும் மொத்தமாய் சரித்துப் பொடித்துத் தள்ள.

அவர் பெயர் இன்றைக்கு சுப்பீஸ். ஒரு காலத்தில் சுப்பிரமணியம். எல்லோருக்கும் பெயர்கள் நவீனமாகிக்கொண்டிருந்த காலத்தில் அப்பா காலத்துப் பெயரை வைத்தார்களே என்று ஆரம்பம் முதலே அதிருப்தி உண்டு. பூர்வீக நிலத்தில் எப்போதும் வறட்சிதான் விளையும். அப்பாதான் அவர்கள் ஊரிலிருந்து வெளியே வந்தவர். சந்தைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர் தன்னை வியாபாரியாக மெல்லக் கட்டமைத்தார். பாடுபட்டு விளைவிப்பதில் இருக்கும் லாபத்தைவிட வாங்கி வைத்து விற்றால் பெரும் லாபம் என்பதைக் கண்டறிந்துகொண்டார்.

மகன்கள் வளர வசதியும் வளர்ந்தது. செழிப்பான வளர்ப்பு என்பதால் பிள்ளைகளுக்குப் படிப்பு வளரவில்லை. பள்ளியோடு நிறுத்திக்கொண்டார்கள். மகன்களுக்குத் திருமணம் செய்துவைத்தார். பரம்பரைச் சொத்துகளைத் தன் வசம் வைத்துக்கொண்டு, தான் சம்பாதித்த பெரும் சொத்தைச் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்துத் தன் ஓய்வுகாலத்தை அனுபவிக்கத் தொடங்கினார்.

அப்பா வழியில் வியாபாரத்தைத் தொடர்ந்த சுப்பிரமணிக்கு, வானத்தில் பறக்க ஆசை வந்தது. குறிப்பிட்ட வட்டத்திற்குள் அப்பா செய்து பெரும் பொருளீட்டிய வியாபாரத்தின் வட்டத்தை வெளிநாடுகளுக்கு நீட்ட முயற்சிகள் தொடங்கின. வெகு விரைவில் ஊரிலேயே பெரிய வியாபாரம், அரசியல் செல்வாக்கு, வெளிநாட்டுப் பயணங்கள் எனப் பெரும் வீச்சுக் காட்டிய சுப்பிரமணிக்கு மிகப் பெரியதொரு வாய்ப்பு வந்தது. பெரும் முதலீடு தேவைப்பட்டது. சுப்பிரமணியைப் பார்த்து பிரமித்தவர்கள் எப்போது சுப்பிரமணி கேட்பார் என முதலீடு செய்யக் காத்திருந்தார்கள். உலகில் யாரையும் நம்புவதைவிட சுப்பிரமணியை நம்புவதில் அவர்களுக்கு அலாதியான கர்வம்.

மிகப் பெரிய அளவில் கடனாக நிதி திரட்டி எடுத்த அந்த முயற்சியில் முதன்முறையாக சுப்பிரமணி தோல்வியைச் சந்தித்தார். அவரின் கிரீடத்தில் ஒட்டியிருந்த வெற்றிகள் அந்தத் தோல்வியை நம்பவில்லை. தோல்வியைச் சமாளிக்க முயற்சிக்காமல், வெற்றியாக்க எடுத்த முயற்சிகள் தோல்வியை ஆழமும் அகலமும் செய்தன. எல்லாம் முடிந்தது என சுப்பிரமணி உணரும்போது, அப்பாவின் மறைவிற்குப் பின் வரப்போகும் பூர்வீக சொத்து வரை அனைத்தும் மூழ்கியிருந்தது. சினிமாக்களில் கண்டதுபோல் சுப்பிரமணி மொத்தமாக இழந்து நின்றார்.

இழந்து முடங்கிய இக்கட்டிலும் சுப்பிரமணி இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்தார், ஒன்று தன் உயிரை மாய்த்துக்கொள்ளாதது, இரண்டாவது தம் தோல்வியை முழுமையாக ஒப்புக்கொண்டது. மூழ்கிய எல்லாவற்றையும் விற்று தன்னை நம்பிக் கொடுத்த அனைவருக்கும் முடிந்தவரையில் சமமாக வழங்கியதில், வெறும் கையும் காலும் மனைவியும் பிள்ளைகளும் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.

**சாவையும் வாழ்வையும் பிரிக்கும் கோடு**

மிகக் குறைந்ததொரு வாடகை வீட்டில் குடியேறி பெட்ரோல் பங்கில் கணக்கெழுதும் வேலை தொடங்கி, அடுத்தடுத்துத் தனக்கு ஒத்துவரும் வேலைகளுக்குச் சென்று என சுப்பிரமணி அனைவராலும் மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, தோல்விக்கான எச்சரிக்கையாகச் சுட்டிக்காட்டப்பட்ட ஆளாக மாறிப்போனார். உறவுகளுக்கும் நட்புகளுக்கும் சுப்பிரமணியின் குடும்பத்தோடு தொடர்பேதுமில்லாத அந்தத் தருணத்தில் அவர்கள் இடம் பெயர்ந்ததைக்கூட அவ்வளவாக யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

ஏழாண்டுகள் பணி புரிந்து, தனியே தொழில் தொடங்கி, அதை நான்கு ஆண்டுகள் நடத்தி, சில தொடர்புகளின் மூலம் தொழிலை விரிவாக்கம் செய்து, சந்தையில் அசத்தலான புதியதொரு பொருளோடு களம் இறங்கியபோது, தொலைக்காட்சி ஆலோசனைகள் நிகழ்வில் ‘ஸ்பைடர் சுப்பீஸ்’ என்ற வந்தபோதும்கூட அது, அந்த தோற்றுப்போன சுப்பிரமணிதான் என்பதை மிக நெருங்கியவர்கள் நம்ப மறுத்தார்கள்.

மாத இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்த பேட்டியில், அன்றைக்குத் தோல்வி வலுக்கட்டாயமாக நகர்த்தியிருந்த இடமான சாவு கண் முன்னே பிரமாண்டமாக நின்றபோது, சாவைப் புறந்தள்ளி, வாழ்ந்து பார்க்கத் துணிந்தது மட்டுமே தம் சாதனை என்று கூறியிருந்தார். வாழ வேண்டும் எனத் தாம் கண்ட கனவுக்குத்தான் இன்றைய வெற்றிகள் யாவற்றையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்ததை வாசித்தபோதுதான் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே இருக்கும் நுண்ணிய கோடு புரிந்தது.

**பெருங்கனவின் தொடக்கம்**

1973இல் பாரீஸ் வீதிகளில் ஒற்றைச் சக்கர சைக்கிளில் வலம் வந்தபடி கிடைத்த இடங்களிலெல்லாம் அனுமதியெதும் பெறாமல் கயிற்றைக் கட்டி அதன் மேல் நடந்து (Wire Walker) சாகசம் செய்யும் இளைஞன் ப்லிப். எட்டு வயதாக இருந்தபோது ஒரு சர்க்கஸ் காட்சியில் கண்டு ஆர்வமாகி, அதைப் பயிற்சி செய்து அதையே வாழ்வாக்கிக் கொண்ட ப்லிப், சர்க்கஸ் பயிற்சியாளர் பாப்பாரூடியிடம் நட்புக்கொண்டு சில யுக்திகள் கற்றுக்கொள்கிறான்.

தனக்கென ஒரு வட்டம் போட்டு, அந்த வட்டத்திற்குள் ஒரு சொல்கூட பேசாமல், அந்த வட்டத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் வித்தை காட்டி ஈர்க்கும் திறமை கொண்டவன். வித்தையின் வினையாய் பல் மருத்துவரிடம் சென்று காத்திருக்கும் நேரத்தில் அந்த அதிசயத்தைப் பத்திரிகை ஒன்றில் வாசிக்க நேர்கிறது. நியூயார்க்கில் இறுதிக் கட்டக் கட்டுமானப் பணியில் இருக்கும் உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களின் (Twin Tower) படமும் செய்தியுமே அது.

1350 அடி உயரமுள்ள அந்தக் கட்டடங்களின் உச்சியில் 140 அடி தொலைவுக்குக் கயிற்றைக் கட்டி அதன் மேல் நடக்கும் ஆர்வம் எழுகிறது. படத்தில் தெரியும் இரண்டு கட்டட உச்சிகளின் இடையே ஒரு கோடு வரைகிறான். அதுவே பெருங் கனவின் துவக்கமாகிறது. பாடகியைக் காதலியாகவும் போட்டோகிராபரை நண்பனாகவும் இணைத்துக்கொண்டு தம் கனவை எட்ட முனைகிறான். அப்படி உலகின் உயர்ந்த இரண்டு மாடிகளினிடையே நடப்பது, வெறும் ஒரு காட்சியாக இருக்காது என்றும் அது அந்த நாட்டையே அதிரச் செய்வதாக இருக்கும் என்றும் சொல்கிறான்.

வழக்கம்போல் பயிற்சியில் இருக்கும்போது கயிறு ஒரு முனையில் சரிந்து விழுகிறது. பாப்பா ரூடியிடம் உயரங்களுக்கு தகுந்த கயிறு, அதன் கனம், தடிமன் கட்டப்பட வேண்டிய ஆகியவை குறித்து யோசனைகள் கேட்க, அவர் “நீ வீதியில் வித்தை காட்டுபவன்தானே! உனக்கு எதற்கு உயரங்கள் குறித்த கேள்வி? என் வாழ்நாளில் திரட்டிய ரகசிய நுணுக்கங்களைக் கேட்கிறாயே, வேண்டுமானால் என் வாரிசுகளுக்குத் தரலாம் உனக்கு ஏன் தர வேண்டும்?” எனக் கேட்கிறார். “அதற்கு என்ன விலையென்றாலும் தரத் தயார்” என்கிறான் ப்லிப். சிறிய தொகைகளைப் பெற்றுக்கொண்டு அந்த யுக்திகளைக் கற்றுத் தருகிறார்.

கயிற்றில் நடந்து மறு முனையை எட்டும் தருணத்தில் கையில் இருக்கும் கழியை வைக்க முற்பட, நிதானம் தவறுகிறது. கயிறு ஆடுகிறது, தவறி விழுகிறான். பாப்பா ரூடி, “பெரும்பாலான கயிற்று சாகசக்காரர்கள் இந்த இடத்தில்தான் விழுந்து மரணிக்கின்றனர். காரணம் அவர்கள் முனையை அடைந்து விட்டதாகக் கருதுகிறார்களேயொழிய அதை அடைந்திருப்பதில்லை. அதனாலாயே விழுகிறார்கள். எட்ட வேண்டிய இடத்தை அடைந்துவிடு, அடைந்துவிட்டதாக முன்கூட்டியே கருதித் தோற்றுப்போகாதே” எனும் பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டு, அந்தப் பாடத்திற்கு கட்டணம் வேண்டாம் என மறுக்கிறார்.

நீர் நிலை ஒன்றின் மேலே கயிறு கட்டி முதன்முறையாக அதிகாரபூர்வ நடை மேற்கொள்கிறான். நம்பிக்கையோடு கயிற்றில் நடக்கும்போது கீழே படகில் செல்வோரைக் கவனிக்கிறான். கவனம் சிதறுகிறது. கயிற்றின் மேல் கொண்டிருந்த சமன் குலைந்து விழுகிறான். முதல் சாகசமே படுதோல்வியில், அவமானத்தில் முடிகிறது. கயிற்றில் நடக்கும்போது அங்கிருக்கும் அனைத்தும் மறைந்துபோய் கயிறு மட்டுமே மேகத்தை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிய வேண்டும் எனும் நுணுக்கத்தைப் பயில்கிறான்.

**இரட்டைக் கோபுரத்தின் அழைப்பு**

அடுத்து, உயரமான இரண்டு கட்டடங்களிடையே இரவோடு இரவாக கயிற்றைக் கட்டி காலையில் கயிற்றில் நடந்து அசத்தி, முழு நம்பிக்கையை மீட்டெடுக்கிறான். சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டதற்காகக் காவல் துறை கைது செய்கிறது. மற்ற நாடுகள் அந்த சாதனையைக் கொண்டாடுகின்றன. அந்தச் செய்தி வந்திருக்கும் அதே செய்தித்தாளில் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரம் படமும் செய்தியும் வருகின்றன. இரட்டைக் கோபுரம் அழைக்கிறது. உடனே புறப்படுகிறார்கள்.

இரட்டைக் கோபுரக் கட்டடங்களை வேவு பார்த்து அங்கும் சில நண்பர்களைத் திரட்டி, பெரும் பிரயத்தனம் எடுத்து, பலரை ஏமாற்றி 200 கிலோ எடை கொண்ட இரும்புக் கயிற்றை 1350 அடி உயரத்தில் உள்ள மாடிக்கு எடுத்துச் சென்று, 140 அடி இடைவெளியில் உள்ள இரண்டு கோபுரங்கள் இடையே அவற்றைப் பெரும் சாகசமாய்ப் பிணைக்கிறான். 24 வயதான ப்லிப், இப்படிப் பெரும் போராட்டங்களுக்கிடையே 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை அந்தக் கயிற்றின் வழியே சட்டத்திற்குப் புறம்பாக 25 கிலோ எடை கொண்ட கழியோடு 45 நிமிடங்களுக்கு எட்டு முறை நடந்து, அமர்ந்து, படுத்து என சாகசம் செய்து உலக சாதனையை நிகழ்த்துகிறார்.

ப்லிப் கைது செய்யப்படுகிறார். கைது செய்த அதிகாரி, ப்லிப் செய்ததை மெச்சி, இனி ஒருபோதும் அப்படியொரு சாதனையைத் தான் காணப்போவதில்லை என்கிறார். நிருபர்கள் சூழ்ந்துகொண்டு, “ஏன் இதைச் செய்தீர்கள்? இத்தனை ஆபத்தானதைச் செய்ய எது தூண்டியது?” எனக் கேட்க, “காரணமெல்லாம் பெரிதாக இல்லை. கயிற்றைக் கட்டுவதற்கு ஏதுவான இடமெனக் கண்டதும், என்னால் கட்டுப்பாட்டோடு இருக்க முடியாது!” என்கிறார் ப்லிப். நீதிமன்றம் அவருக்கு “பூங்கா ஒன்றில் குழந்தைகள் மகிழும் வகையில் குறைந்த உயரத்தில் கயிற்றின் மீது நடக்க வேண்டும்” என்பதையே தண்டனையாக வழங்குகிறது.

ப்லிப் பெடி 1974இல் நிகழ்த்திய இந்த ஆபத்தான சாதனை 2015ஆம் ஆண்டு ‘தி வாக்’ பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

மரணம் என்பதை மறுப்பதற்கொன்றுமில்லை. ஆனால் வாழும் காலத்தில் மரணத்தை ஏன் விரும்பி ஏற்க வேண்டும்? அதை ஏற்க விரும்பாத சுப்பீஸ், ப்லிப் போன்ற அனைவரும் அதன் எதிர்ச் சொல்லான வாழ்வு என்பதையே விரும்பினார்கள். அதையே மந்திரமாக கைக்கொண்டார்கள்.

மரணம் போன்று வாழ்வு ஒன்றும் எளிதாக இருப்பதில்லை. அது கயிற்றின் மேல் நடப்பது போலவும்தான். முடிச்சு அவிழும். சிலவற்றை அடைந்துவிட்டதாக அவசரமாகக் கருதுவதில் தடுமாற்றம் நிகழும். சில நேரங்களில் புறக்காரணிகள் கவிழ்த்துவிடத் தூண்டும். இவை யாவற்றையும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, தேவைப்படின் மறந்து, புறந்தள்ளித் துணிகின்றவர்களே வாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுகிறார்கள். அவர்களுக்கு வாழ்வு என்பது, ‘ஏன்!’ என்ற கேள்விக்கான வெறும் பதில் அல்ல. வாழ்வு என்பது கயிறு கட்டச் சமமான உயரங்கள் கிடைப்பது. கிடைத்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. வாழ்ந்துகொண்டேயிருப்பார்கள். காரணம், வாழ்வு என்பது மரணத்திற்கு எதிர் நிலை.

வாழ்வை ரசிப்பவர்களை, வாழ்வைக் கொண்டாடுபவர்களை அந்த வாழ்க்கைக்குள் அவர்கள் கண்டடையும் ஏதோ ஒன்று பிரியத்தோடு ஒட்டியணைத்து, அவர்கள் விரும்பும் வண்ணம் இயக்கி நகர்த்துகிறது.

(கட்டுரையாளர் ஈரோடு கதிர் எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், பேச்சாளர். உறவெனும் திரைக்கதை, பெயரிடப்படாதபுத்தகம், கிளையிலிருந்து வேர்வரை ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: kathir7@gmail.com)

[பகுதி 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/11/37)

[பகுதி 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/18/65)

[பகுதி 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/25/17)

[பகுதி 4](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/10/34)

[பகுதி 5](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/17/14)

[பகுதி 6](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/24/3)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share