அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்றம் செய்யும் எண்ணமில்லை என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம், 2003ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை சட்டங்களின் கீழ் பதியப்படும் வழக்குகளில் மேல்முறையீட்டை அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு மையம் விசாரித்துத் தீர்ப்பளித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு இந்த மையத்தை சென்னையிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவை நேற்று (பிப்ரவரி 4) பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “வழக்கு தொடுத்தவர்களுடைய வசதிகளைக் கருதி, நாடு முழுமையும் பரவலாக அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் புதிய கிளைகளை அமைக்க, மத்திய அரசு முன்வர வேண்டும். அதைவிட்டு தகுந்த காரணங்கள் எதுவும் இன்றி, தலைமையகத்தை இடம் மாற்றுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிற முயற்சிகள் நேர்மை அற்றவை. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், கணினிகளின் வழியாகவே மேல்முறையீடு செய்ய முடியும் என்கின்ற நிலையில், தலைமையகத்தை இடம் மாற்றுவதற்கான தேவை எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்ற நிலையில், சென்னையில் இருக்கின்ற அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை, வடஇந்தியாவுக்கு மாற்ற முயற்சி செய்வது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது” என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் மாநிலங்களவையில் உரையாற்றிய வணிக வரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “உறுப்பினர் வைகோ அவர்களுடைய கோரிக்கையைக் கேட்டேன். அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்று உறுதியளித்தார். மேலும், தேவைப்படுகின்ற இடங்களில் மேலும் புதிய கிளைகளை அமைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.�,