வைகை அணையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாகத் தண்ணீர் திறப்பு!

public

வரலாற்றில் முதன்முறையாகத் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இதுதவிர மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைகை அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் போகம், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இரண்டாம் போகப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அணையில் நீர் இருப்பு அதிகம் இருந்தால் ஒருபோக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால், வைகை அணை பயன்பாட்டுக்கு வந்த 64 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் மூன்று போகத்துக்கும் முழுமையாகத் தண்ணீர் திறக்கப்பட்டது இல்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்தது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை ஒன்பது மாதங்களாக முதல் போகத்துக்கும், அதைத் தொடர்ந்து இரண்டாம் போகத்துக்கும், தற்போது மூன்றாம் போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை வரலாற்றில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது இதுவே முதன்முறை ஆகும்.
வைகை அணை நிரம்பினால் 6,091 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். ஆனால் கடந்த ஒன்பது மாதங்களில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக மட்டும் 23,620 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஒன்பது மாதங்களில் வைகை அணையின் நீர் இருப்பை விட மூன்று மடங்கு தண்ணீர் பாசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.26 அடியாகவும், நீர்வரத்து 171 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,384 மில்லியன் கன அடியாக உள்ளது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *