விவசாயத் துறையை வளர்க்கும் விதமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணைந்த கொள்கைகளை உருவாக்க வேண்டுமென்று ஒன்றிய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் (நபார்டு) 37ஆவது ஆண்டு தொடக்க தினம் ஜூலை 13ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள அருண் ஜேட்லி இந்த நிகழ்வில் வீடியோ கான்ஃபெரன்சிங் வழியாக இணைந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வேளாண் துறையை வளர்க்க ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இரண்டு அரசுகளும் இணைந்து கொள்கைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை ஒருங்கிணைத்தே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. அதைப் போலவே வேளாண் துறையிலும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கொள்கைகளை உருவாக்கினால் விவசாயிகளுக்குப் பயன்படும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்றார். இந்த நிகழ்வின் தொடக்கத்தில் இணை நிதியமைச்சர் எஸ்பி.சுக்லா பேசுகையில், பொதுத் துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை ஒன்றிய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறினார். அவர்களின் பெயர் எதையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.�,”