வேலூர் தேர்தல்: மும்முனைப் போட்டி!

Published On:

| By Balaji

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவிவருகிறது.

வருமான வரி சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டதன் காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி ரத்துசெய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கட்சியைப் பதிவு செய்யும் பணிகள் நடந்துவருவதாலும், சின்னம் காரணமாகவும் வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 11ஆம் தேதி தொடங்கி இன்று (ஜூலை 18) வரை நடைபெற்றது. ஜூலை 11ஆம் தேதி ஏ.சி.சண்முகமும், 15ஆம் தேதி தீபலட்சுமியும், நேற்று கதிர் ஆனந்தும் மனுதாக்கல் செய்தனர். இன்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்த நிலையில், சுயேச்சைகள் உள்பட 50 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் வேலூர் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா சட்ட விரோதமாகவும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப் பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ, முடிவுகளோ அடைவதற்கு முன்னரே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீது மக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இச்சூழலில் மக்களின் நம்பிக்கையை காப்பது என்பது மிக முக்கியம். எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுகவனம் செலுத்தவிருக்கிறது. எதிர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக, திமுக, நாம் தமிழர் என மூன்று கட்சிகளைத் தவிர வேறு முக்கிய கட்சிகள் எதுவும் வேலூரில் போட்டியிடாததால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. நாளை மறுநாள் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் வேலூரில் முகாமிட்டு தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share