புதுக்கோட்டையில் மகிளா கூடுதல் நீதிமன்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற திறப்பு விழா நேற்று (அக்டோபர் 5) நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய விஜயபாஸ்கர், “இங்கு பேசியவர்கள் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கொசுக்கடி தாங்க முடியவில்லை எனக் கூறினர். கொசு கடிப்பதற்கு முன்பு அது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது. கொசு கடித்த பிறகுதான் அது சுகாதாரத் துறைக்கு வருகிறது. மொத்தத்தில் எங்கள் துறை மீதுதான் எல்லோரும் குறை கூறுகிறார்கள். இருந்தாலும், உள்ளாட்சித் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன” என்று பேசினார். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
இதனை மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவையாகவே தோன்றும். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணிக்கு எதிராகவே இவ்வாறு பேசியிருக்கிறார் விஜயபாஸ்கர்.
இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
அமைச்சர்களும் வேலுமணிக்கும் விஜயபாஸ்கருக்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்பு இருந்துவருகிறது. ஏற்கனவே நடைபெற்ற டெங்கு தடுப்பு ஆலோசனைக் கூட்டங்களில் கூட, “உள்ளாட்சித் துறையின் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. அதனையும் சேர்த்து சுகாதாரத் துறைதான் மேற்கொண்டு வருகிறது” என்று உள்ளாட்சித் துறை மீதான தனது ஆதங்கத்தை விஜயபாஸ்கர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குட்கா பிரச்சினை வந்த சமயத்தில் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்கலாம் என்ற யோசனையை முதல்வரிடம் வேலுமணி, தங்கமணி இருவரும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கவில்லை. அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. இதுதான் விஜயபாஸ்கரின் நேற்றைய பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.அதாவது, அரசு விழாவில் நீதிபதிகள் முன்னிலையிலேயே உள்ளாட்சித் துறை சரிவர வேலை செய்யவில்லை என்று மறைமுகமாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை கேள்விப்பட்ட வேலுமணி, விஜயபாஸ்கர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம். பிரச்சினை இருந்தால் நமக்குள் பேசிக்கொள்ளலாம், அதைவிட்டுவிட்டு நீதிபதிகள் முன்னிலையில் உள்ளாட்சித் துறையை குறைசொல்வது போல பேசியிருக்கிறார் விஜயபாஸ்கர் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அதிமுகவினர்.
�,”