அதிமுக வேட்பு மனுவில் பன்னீர்செல்வம், பழனிசாமி கையெழுத்திடத் தடை விதிக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தை கடந்த 4ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர். 14ஆம் தேதியுடன் விருப்ப மனு விநியோகம் முடிந்த நிலையில், மொத்தமாக 1,737 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் விருப்ப மனு வாங்கியுள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து விரைவில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், “அதிமுக விதிகளின்படி, கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு வேட்பு மனுவின் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. ஆகவே வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இவ்வழக்கு நேற்று (பிப்ரவரி 18) விசாரணைக்கு வந்தபோது, கே.சி.பழனிசாமியின் மனு தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு வரும் மார்ச் 13ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டுமென கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், அதை தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.�,