டி.எஸ்.எஸ். மணி
அமெரிக்கப் பயணத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் 50,000 இந்தியர்கள் பங்குகொண்ட ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சியில் பேசினார். அதில் முக்கியமாக, “ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக வர வேண்டும்” என்று புகழுரையாற்றினார்.
2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. அதில் மீண்டும் ட்ரம்ப் நிற்கிறார். இப்போது மோடியின் அமெரிக்க வருகையை ஒட்டி, அமெரிக்க வாழ் இந்தியர்களை ஒரே இடத்தில் அழைத்து பெரும் மாநாட்டுக் கூட்டம் போல கூட்டி அதில் மோடி பேசியிருக்கிறார். அப்போதுதான் மீண்டும் அமெரிக்க அதிபராக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார். இது நம்மூர் தேர்தலைத்தான் நினைவுபடுத்துகிறது.
வேட்பாளர் மேடையில் ஓர் ஓரமாக நிற்பார். அவரை அறிமுகப்படுத்தும் தலைவர் மைக்கில் பேசுவார். வேட்பாளரைப் புகழ்ந்து பேசுவார். வேட்பாளர் அதை ரசித்துக் கேட்பார். வெட்கத்தால் வேட்பாளர் நெளிவார். வேட்பாளரை அறிமுகம் செய்யும் தலைவர்தான் அதிகம் பேசுவார். வேட்பாளர் அந்த அளவுக்கு அதிகம் பேச மாட்டார். வேட்பாளர் தனது பேச்சில், தலைவருக்கு நன்றி சொல்லிப் பேசுவார். இதுதான் அப்படியே அந்த ஹூஸ்டன் மேடையிலும் நடந்துள்ளது..
மோடி தமிழில் ‘எல்லாம் சவுக்கியம்’ என்று கூறியதைப் பற்றி நம்மவர்கள் சிலாகிக்கிறார்கள். அதில் சிலர் நம்மூர் இந்தி எதிர்ப்புக்குப் பதில்தான் இந்தப் பேச்சா என்றுகூடப் பேசுகிறார்கள். இதை எதற்காக, அதனுடன் இணைத்து எண்ண வேண்டும்? தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் மோடி உட்பட எல்லா வடநாட்டுத் தலைவர்களும் சில வார்த்தைகளைத் தமிழில் பேசுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். தவிர, ஹூஸ்டனில் நடந்தது, அமெரிக்க வாழ் இந்தியர்களின் அணிதிரளல். அதில் எல்லா இந்திய மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு பேச்சாளர், தான் பேசும்போது, அவர்களை உணர்ச்சிகரமாகத் தொடுவதற்காக, அவரவர் தாய் மொழிகளில் சில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு, அவர்களிடம் கைதட்டல் வாங்கி விட்டுத் தொடர்ந்து பேசுவது என்பது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தானே மோடியும் பேசியுள்ளார். தவிர, தமிழ் உட்பட எட்டு இந்திய மொழிகளில், எல்லாம் சவுக்கியம் என்று கூறியுள்ளார். அது ’மோடி சவுக்கியமா?’ என்ற கூட்டத்திற்கான தலைப்புக்குக் கொடுக்கப்படும் பதில் என்றுதானே பார்க்க முடியும்?
குறிப்பாக, பல மொழிகள் பேசும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், அதைக் குறிப்பிட்டு, வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்தியா பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். இதை வேண்டுமானால், ஒரே நாடு, ஒரே மொழி என்பது யதார்த்தத்துக்குப் பொருத்தமானதல்ல என்று அமெரிக்க இந்தியர்களிடம் போயாவது மோடி ஒப்புக் கொள்கிறாரா என்று நாம், நமது திருப்திக்காகக் கேட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் ஓர் அரசியல், வெளிநாடு சென்றால் வேறு ஓர் அரசியல் என்றும்கூட அதை விமர்சிக்கலாம். பங்கெடுத்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மோடி அங்கே சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், மேடையில் இருந்தவர்களிடமும், அதே வேற்றுமையில் ஒற்றுமை இருந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும், வர்த்தகப் போர் என்று கூறும் அளவுக்கு, மாறி மாறி இரு நாடுகளும், இரு புறத்திலிருந்தும், இறக்குமதியாகும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது, பதிலுக்குப் பதில் வரியைக் கூட்டி அறிவிப்பது போன்ற வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அது பற்றியும் இரு தலைவர்களும் பேசி முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்பதும் இந்தச் சந்திப்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவே மேடையில் இருப்போர் இடையே உள்ள வேற்றுமையில் ஒற்றுமைதானே?
அதே மேடையில் நின்று கொண்டு, ட்ரம்ப் அருகே இருக்கும்போதே, பாகிஸ்தானை, “பயங்கரவாதத்தின் ஏற்றுமதியாளர்கள்” (அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி மன்னரின் விமானத்தில் வந்து இறங்கப் போகிறார்) என்று மோடி சாடியிருப்பதை சில ஏடுகள் தலைப்பாகப் போட்டுள்ளனர். அதுவும் வேற்றுமையில் ஒற்றுமைதானே? .
அதே மேடையில் ட்ரம்ப் பேசும்போது, “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று கூறியுள்ளார். ஆனால் மோடி நமக்கெல்லாம், பலமுறை “பயங்கரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது” என்று ஆறு ஆண்டுகளாக கற்றுக் கொடுத்துள்ளார். இதுவும், வேற்றுமையில் ஒற்றுமைதானே. ட்ரம்ப் கூறுகின்ற இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது சன்னி பிரிவைச் சொல்கிறாரா… ஷியா பிரிவைச் சொல்கின்றாரா என்று விவாதிக்க வேண்டும். ஏனென்றால், இதே அமெரிக்கா, ஈராக் மீது, தாக்குதல் தொடுக்கும்போது, ஷியா பிரிவை பயன்படுத்தி, சன்னி பிரிவில் இருந்த சதாம் உசைனைத் தாக்குவார்கள். ஆப்கானில், தாலிபான் என்ற சன்னி பிரிவைத் தாக்குவார்கள். இன்றும் ’இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று கூறிக் கொள்ளும் சன்னி பிரிவை எதிர்த்து, உலகம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு என்று கூறுவார்கள். ஆனால், சமீபத்திய சவூதி எண்ணெய்ச் சேமிப்பு ஆலை மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் முதல் குறி ஷியா பிரிவைச் சேர்ந்த ஏமன் நாட்டுக் கலகக்காரர்கள், ஈரான் அரசாங்கம், ஈராக் பெரும்பான்மையினர் என மாறியுள்ளது. ஆகவே அமெரிக்க அரசு நம்மூர் அரசியல்வாதிகள் போல போரில் கூட்டணிகளை மாற்றிக்கொண்டே இருக்கும் தன்மையுள்ளது என்பது புரிகிறது.. இப்போதைக்கு அவர்களுக்கு ஷியா பிரிவினர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகத் தெரியும். இதுதான் வேடிக்கை.
மோடியைப் பாராட்டி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏஆர்ஜி கால் பந்தாட்ட மைதான அரங்கிற்கு உள்ளே ஆர்ப்பரிக்கும்போது, அரங்குக்கு வெளியே சில நூறு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நின்று கொண்டு, மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அவர்கள், ‘இந்தியாவின் பயங்கரவாத முகம் மோடி’ என்று கூட சுவரொட்டி வைத்திருந்தார்கள். குறிப்பாக, ‘ஹூஸ்டன் கிரோனிகல்’ என்ற ஏடு, தனது ஞாயிறு இதழில் தீட்டிய தலையங்கத்தில், ‘டெக்சாஸ் நகரில் கொடுக்கப்படும் வரவேற்பை யாரும் மோடியின் ஹிந்து தேசியம் மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளுக்குக் கொடுக்கப்படும் ஆதரவு என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்’ என்று எழுதியுள்ளார்கள். ‘நாளுக்கு நாள் இந்தியாவில் கூடி வரும், முஸ்லிம், கிறிஸ்துவர்களான சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள், ஹிந்து தீவிரவாதிகளுக்கு மோடி கொடுத்துவரும் உற்சாகம், அதிகரித்துவரும் வெறுப்பு பேச்சுக்கள் போன்ற மனித உரிமைக் குழுக்கள் எழுப்பிவரும் பிரச்சினைகளைக் கவனிக்காமல் கண்மூடித்தனமான ஆதரவு என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது என்றும் எழுதியுள்ளார்கள்.
காஷ்மீரில் 1949இல் கொடுக்கப்பட்ட சட்ட ரீதியான உத்தரவாதமான, சிறப்பு அதிகாரமான 370ஐ சமீபத்தில் ரத்து செய்தது. பாதுகாப்புத் துறை அந்த மாநிலத்தை முழுமையாகக் கையில் எடுத்துக் கொண்டது, அங்கே இணையத்தையும் தொடர்பு சாதனங்களையும் அறுத்து விட்டது போன்ற தடைகளை நீக்க மோடியிடம் ட்ரம்ப் கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘ட்ரம்ப், அமெரிக்காவின் மோடி’ என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஆகவே அமெரிக்காவில் மோடியின் முதல் நிகழ்ச்சி, வரவேற்பும் எதிர்ப்பும் கலந்த ஒன்றாக இருக்கிறது.
�,”