சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆந்திர மாநில முன்னாள் எம்.பி சிவபிரசாத் நேற்று (செப்டம்பர் 21) காலமானார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் சித்தூர் தொகுதி மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் நரமல்லி சிவபிரசாத். சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்த சிவபிரசாத், திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 19ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை நேற்று முன்தினம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்துச் சென்றார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவபிரசாத் நேற்று உயிரிழந்தார்.
சிவபிரசாத்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மருத்துவரான இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சந்திரபாபு அமைச்சரவையில் தகவல் மற்றும் பொது உறவுகள் துறையின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இருமுறை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார்.
2014-19 காலகட்டத்தில் எம்.பி.யாக இருந்த சிவபிரசாத், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் நடத்திய போராட்டங்களில் ஹிட்லர், சிவன், நாரதர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகி, பள்ளி மாணவன் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் வந்து கலந்துகொண்டார். இவர் கலைஞர் வேடமணிந்து வந்து கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிவபிரசாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “என் நெருங்கிய நண்பரை இழந்தேன். ஆந்திர மாநில உரிமைகளுக்காக ஓய்வின்றி பாடுபட்டவர் சிவபிரசாத். அவரது மறைவு சித்தூர் மாவட்டத்துக்கு மட்டுமல்ல, ஆந்திர மாநிலத்துக்கே பேரிழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.�,