�
நடப்பு பருவத்தில் அரசு தரப்பிலிருந்து மொத்தம் 16.51 மில்லியன் டன் அளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் சந்தைப் பருவத்தில் மொத்தம் 37.5 மில்லியன் டன் அளவிலான நெல்லைக் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கையும் தாண்டி அதிகளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உணவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் அவர் மேலும் கூறுகையில், “நடப்புப் பருவத்தில் இதுவரையில் அரசு தரப்பிலிருந்து மொத்தம் 16.51 மில்லியன் டன் அளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் செப்டம்பர் மாதம் நிறைவடையும் இந்தப் பருவத்தில் இலக்கைத் தாண்டி அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். சென்ற ஆண்டில் மொத்தம் 38.18 மில்லியன் டன் அளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது” என்றார்.
பஞ்சாப், பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் செப்டம்பர் மாத இறுதியில் மழை பாதிப்பு இருந்தது. இருப்பினும் கொள்முதல் பணிகளில் எவ்விதக் குறைபாடும் இருக்காது என்று அவர் கூறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் 10.86 மில்லியன் டன், ஹரியானாவில் 3.88 மில்லியன் டன், தெலங்கானாவில் 9,96,779 டன், சத்தீஸ்கரில் 3,02,319 டன், உத்தராகண்டில் 1,71,098 டன் என்ற அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,10,771 டன்னும், கேரளாவில் 49,813 டன்னும், மகாராஷ்டிராவில் 17,880 டன்னும் இதுவரையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.�,