2018ஆம் ஆண்டில் இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையில் 22 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தது, நுகர்வோரிடையே தேவை உயர்வு போன்ற காரணங்களால் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் சீஸ், பிஸ்கட், தலைமுடி ஒப்பனைப் பொருட்கள், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி போன்ற பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் அமைப்பு சார்ந்த சில்லறை விற்பனை மையங்களில் 2018ஆம் ஆண்டில் 22 சதவிகிதம் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ’இந்தியாவில் சில்லறை விற்பனை மறுவடிவமைப்பு’ என்ற தலைப்பில் *நீல்சன் இந்தியா* நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு ரூ.41,416 கோடியாக இருக்கிறது. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் அமைப்பு சார்ந்த சில்லறை விற்பனைச் சந்தையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இக்காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக நடைபெற்றதால் விற்பனையில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்பொருள் சந்தையில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சில்லறை விற்பனை மையங்களின் பங்களிப்பு 10 சதவிகிதமாக இருக்கிறது.
இந்தியாவின் 17 முன்னணி மெட்ரோ நகரங்களில் நுகர்பொருள் விற்பனை சிறப்பாக இருந்ததாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,