வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியைப் பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கான விதியை மாற்றி அமைக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பெருமழையையும் வெள்ளத்தையும் கேரளா சந்தித்துள்ளது. அம்மாநிலத்தின் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காகப் பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த பலரும் அரபு நாடுகளில் வேலை செய்துவரும் நிலையில், அந்நாடுகளும் கேரளாவுக்கு நிதி அறிவித்து வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதி வழங்க முன்வந்துள்ளது.
ஆனால், 2007ஆம் ஆண்டு முதல் எந்தவொரு நாடு மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்தும் நிதியுதவியைப் பெறுவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதால் ஐக்கிய அரபு அமீரக உதவியை மத்திய அரசு ஏற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும்விதமாக, “ஐக்கிய அரபு அமீரகத்தை வேறு நாடாகப் பிரித்து பார்க்க முடியாது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெளிநாடுகளின் நிதியுதவியைப் பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சாம் ட்விட்டரில் நேற்று (ஆகஸ்ட் 22) பதிவிட்டுள்ளார். “கேரள வெள்ள பாதிப்புக்கு தாய்லாந்து அரசும் தங்களால் முயன்ற உதவியைச் செய்ய முன்வந்தது. ஆனால், வெளிநாட்டு நிதியுதவியை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. எனினும் தாய்லாந்து மக்களின் எண்ணம் இந்திய மக்களுடனே இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிதியுதவியை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை வெளியுறவு அமைச்சகமே எடுக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, “முந்தைய அரசு விதிமுறைகளை மாற்றியிருந்தால், மோடி அரசு அதனை மாற்றி எழுதலாம். தற்போதைய விதிமுறைகளின்படி ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி உதவியைப் பெற முடியாமல் இருக்கலாம், எனவே விதிகளை மாற்றலாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு நிதியுதவியை வாங்கக் கூடாது என்று தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, விதிமுறை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,