உலக அரசியல் பழகு 7 – ஆரா
வெளியுறவுக் கொள்கை என்பது வர்த்தகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா? வெளியுறவுக்கு வேறு எந்த கூறும் கிடையாதா?
இரண்டாம் முறை பதவியேற்ற மோடியின் அரசு வெளியுறவுக் கொள்கையில் புதிய சகாப்தம் படைக்க இருப்பதாக பல பத்திரிகைகள் புகழ்கின்றன. இந்தியா தனது பாரம்பரியம் மிக்க வெளியுறவுக் கொள்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒரு சார்பு நிலை எடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
இந்தியா போன்ற நாடுகளில் வெளியுறவுக் கொள்கை என்பது தனி நபர்களின் செயற்பாடுகளால் மாற்றத் தக்கதா என்ற கேள்விகளும் ஜெய்சங்கர் என்ற வெளியுறவுக் கொள்கை சூத்திரதாரியை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் எழுகின்றன.
இந்தியா உலகத்தை எப்படிப் பார்த்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அணி சேராக் கொள்கையை நாம் அறிந்துகொண்டாக வேண்டும். இன்றைய நடுத்தர வயதினர் அனைவரும் தத்தமது பள்ளிப் பாடங்களில் அணி சேராக்கொள்கை பற்றிப் படித்திருப்போம்.
அணிசேராக் கொள்கை என்பதற்கு உண்மையான உந்துதல் என்னவென்றால் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா பெற்ற அறவழி வெற்றிதான். அந்த அறவழியின் அடுத்த கட்ட நீட்சிதான் அணி சேராக் கொள்கை.
அணிசேரா என்றா வார்த்தையை முதன் முதலில் கட்டமைத்து ஐ.நாவில் அரங்கேற்றியவர் நவீன இந்தியாவின் மிக முக்கிய ராஜதந்திரிகளில் ஒருவரான வி.கே.கிருஷ்ண மேனன். நேருவுக்கு மிக நெருக்கமானவரான வி.கே. கிருஷ்ண மேனன் 1953 ஆம் ஆண்டு ஐ.நா.சபையில் உரையாற்றும்போதுதான் அணி சேரா என்ற பதத்தைப் பயன்படுத்தினார். அது வெறும் பதமல்ல.
அப்போதைய உலகின் சூப்பர் பவர் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா, ரஷ்யா இரண்டின் பக்கமும் சாயாமல் நீதியின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் மட்டுமே நிற்பது என்பதுதான் அணி சேரா நாடுகளின் அடிப்படைக் கொள்கை. 1954 ஆம் ஆண்டு நேரு இலங்கைத் தலைநகர் கொழும்பில் பேசும்போது அணி சேரா என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.
அந்த கால கட்டத்தில் சுதந்திரம் அடைந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை அணி சேரா நாடுகள் என்ற ஒரு அமைப்பாக திரட்டுவதில் இந்தியா காட்டிய அக்கறையும், குறிப்பாக நேருவின் பங்கும் குறிப்பிடத் தக்கவை. இந்த முயற்சிகளின் விளைவாக 1961 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியாவின் பெல்கிரேட் நகரில் அணி சேரா நாடுகள் என்ற கூட்டமைப்பு முறைப்படி துவங்கப்பட்டது. இந்திய பிரதமர் நேரு, யுகோஸ்லேவிய அதிபர் ஜோசிப் ப்ரோஸ் ஆகியோரின் முன் முயற்சியில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. சென்னை சட்டக் கல்லூரியில் படித்த வி.கே. கிருஷ்ணமேனனின் மூளையில் உதித்த அணி சேரா நாடுகள் என்ற தத்துவம் நேருவின் மூலம் உலக அரங்கில் இந்தியாவுக்கு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்தது.
அணி சேரா நாடுகளுக்காக நேரு ஐந்து அம்ச கொள்கைகளை உருவாக்கினார்
1. நாடுகளுக்கு இடையான நிலவுரிமை, இறையாண்மைக்கு பரஸ்பரம் மதிப்பளித்தல்
2. பரஸ்பரம் நாடுகளுக்கு இடையே சீற்றம் பேணாதிருத்தல்
3. நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
4 சமமான பரஸ்பர நற்பலன்களை அனுபவித்தல்
5. அமைதியான போக்கு
இவையே அணி சேரா நாடுகளின் ஐந்து அடிப்படைத் திட்டங்கள்.
அதாவது இரு வல்லரசுகளின் அணியில் அடிமையாக சேராமல் நாமே தனி அணியாக தனித்துவமாக நிற்போம் என்பதுதான் அணி சேரா நாடுகளின் முக்கிய அம்சம். இந்த அணி சேரா தத்துவத்தின்படியே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பற்பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. விடுதலை பெற்ற நாடுகளை வேறு வகையில் அடிமையாக்காமல் காப்பாற்றும் அமைப்பாக அப்போது அணி சேரா நாடுகள் கருதப்பட்டது. இதை முன்னின்று தொடங்கிவைத்த இந்தியாவின் பெருமை அப்போது மூன்றாம் உலக நாடுகளில் முக்கியமாக பேசப்பட்டது.
அப்படிப்பட்ட இந்தியாவின் அணி சேரா கொள்கை என்பது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
இதற்கு முக்கியமான சாட்சி 2016 ஆம் ஆண்டு அணி சேரா நாடுகளின் முக்கியமான மாநாடு வெனிசூலாவில் நடந்தது. இதில் அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பிலுள்ள 120 நாடுகளில் 119 நாடுகளின் தலைவர்கள் கல்ந்துகொண்டனர். ஆனால் ஒரே ஒரு நாடு கலந்துகொள்ளவில்லை. ஒரு நாடுதானே கலந்துகொள்ளவில்லை என்று சாதாரணமாக கருதிவிடாதீர்கள்.
அந்த ஒரு நாடு அணி சேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கிய இந்தியாதான். 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அணி சேரா நாடுகளின் மாநாட்டைப் புறக்கணித்தார். இது வெறும் பயண ரத்து என்பது மட்டுமல்ல. இந்தியாவின் வெளியுறவுத் துறை வரலாற்றில் முக்கியமான கட்டம். இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். ஆனாலும் பிரதமர் மோடி இந்த மாநாட்டைப் புறக்கணித்தது என்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.
அணி சேரா நாடுகள் என்ற பாதையில் இருந்து, அமெரிக்காவை மையப்படுத்திய நாடு என்ற பாதைக்கு இந்தியா திரும்பிவிட்டதை வெளிப்படையாகக் காட்டுகிறது இது என்று அப்போதே வெளியுறவுத் துறை விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அணி சேரா கொள்கையில் இருந்து இந்தியா முற்றிலும் தடம் மாறியதை சில நாட்களுக்கு முன், இஸ்ரேலிய பிரதமர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த செய்தியும் முக்கியமான சாட்சியாக்கி எடுத்துச் சொல்லுகிறது.
(அடுத்த சனிக்கிழமை சந்திப்போம்)
[பகுதி 1]( https://minnambalam.com/k/2019/05/04/9)
[பகுதி 2]( https://minnambalam.com/k/2019/05/11/17)
[பகுதி 3]( https://minnambalam.com/k/2019/05/18/19)
[பகுதி 4](https://minnambalam.com/k/2019/05/25/24)
[பகுதி 5]( https://minnambalam.com/k/2019/06/01/14)
[பகுதி 6]( https://minnambalam.com/k/2019/06/08/18)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”