மசூத் அசார் விவகாரத்தில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்பு குழுவில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு பிரான்ஸ் முன்மொழிந்தது. இதற்கு ஐநா பாதுகாப்பு குழுவில் 14 நாடுகள் ஆதரவளித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமில்லா உறுப்பு நாடுகளும், உறுப்பினரல்லாத நாடுகளும் பிரான்ஸின் முன்மொழிதலுக்கு ஆதரவளித்தன. எனினும், நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா இந்த முன்மொழிதலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு இத்துடன் நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பாதுகாப்புக் குழு உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவின் போக்கு தொடர்ந்தால் வேறு நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பலவீனமான நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைக் கண்டு அஞ்சுகிறார். இந்தியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் நரேந்திர மோடி வாயிலிருந்து ஒரு வார்த்தைக்கூட வருவதில்லை. குஜராத்தில் சீன அதிபருடன் ஊஞ்சலாடுவது, டெல்லியில் அவரை கட்டி அணைத்துக்கொள்வது, சீனாவில் அவருக்கு தலை வணங்குவது. இவைதான் சீன விவகாரத்தில் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார். மோடியின் வெளியுறவுக் கொள்கை எல்லாம் தொடர் பேரிடர்களாக அமைந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலாவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விமர்சனங்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இதுவரை நான்கு முறை முன்மொழியப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்தியா மட்டும் தனியாக முன்மொழிந்தது. 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவின் முன்மொழிதலுக்கு ஆதரவளித்தன. 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்மொழிந்தன. 2019ஆம் ஆண்டில் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளன.
அதற்கு ஐநா பாதுகாப்புக் குழுவின் 15 உறுப்பு நாடுகளில் 14 நாடுகள் ஆதரவளித்துள்ளன. மேலும், பாதுகாப்புக் குழுவில் உறுப்பினர் அல்லாத ஆஸ்திரேலியா, வங்கதேசம், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஆதரவளித்துள்ளன. ஆக, ஐநாவில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து நமக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இந்தத் தகவல்களை ஏன் கூறுகிறேன் என்றால், இந்த விவகாரத்தில் நமது வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டதாக கூறும் தலைவர்கள் கவனிக்க வேண்டும். 2009ஆம் ஆண்டில் இந்தியா தனியாக இருந்தது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.�,