கேரள மாநிலத்தில் ஆசிரியருக்கான பட்டயப்படிப்பு படித்ததால் அரசு வேலையை இழந்த பெண்ணுக்கு 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த சுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “பள்ளிப்படிப்புகளை அரசு பள்ளிகளிலும், ஆசிரியருக்கான பட்டயப் படிப்பை கேரள மாநிலத்திலும் படித்தேன். 1992ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் இடைநிலை ஆசிரியருக்கான பணியில் வெளிமாநிலத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியருக்கான வேலை 1995ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் தனக்கு கிடைத்தது. 1995ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் போது, 1997ஆம் ஆண்டுதான் வெளிமாநிலத்தில் ஆசிரியருக்கான பட்டயப்படிப்பு முடித்ததாகக் கூறி தன்னை வேலையிலிருந்து நீக்கி மாவட்ட தலைமை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 1992ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணைபடி அந்த பெண்ணுக்கு வேலை வழங்க 2016ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனக்கு வேலை வழங்காததை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ,மாவட்ட தலைமை கல்வி அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார் சுதா.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இவருக்கு வேலை வழங்குவதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் கடந்த வாரம் மனுதாரரான அந்தப் பெண்ணுக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அரசு வேலை கிடைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று(மார்ச் 22) வந்தபோது 22 ஆண்டுகளாக அரசு பணிக்கு கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்று மனுதாரர் சார்பாக வாதிடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து ஒரு மாதத்திற்குள் பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.�,