மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து, நேற்று மதியம் முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். மாலை 6 மணியளவில் அறிவாலயத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. வெற்றியைத் தேடித் தர பாடுபட்டிருக்கும் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
இந்த வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், களத்தில் இறங்கும் முன்பே ஓர் உறுதி எடுத்துக்கொண்டோம். தலைவர் கலைஞர் இல்லாமல் நடைபெறும் தேர்தல் இது. அவர் இருந்திருந்தால் என்னென்ன கற்றுக்கொடுத்திருப்பாரோ, அதையெல்லாம் அவரிடமிருந்து ஏற்கனவே கற்ற காரணத்தால் தீவிரமாகப் பணியாற்றியிருக்கிறோம். அதன்படி இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். இந்த வெற்றி மாலையை தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று கூறியிருந்தோம். அதை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, சட்டப்பேரவை இடைத் தேர்தலில் இன்னும் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என இன்றைய ஆட்சியாளர்கள் சதி வேலை செய்வார்கள். அதை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், “இப்போது ஒரே ஒரு கவலைதான். அது, கலைஞர் இந்த வெற்றியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான். இருந்தாலும் கலைஞரின் சிலைக்கு முன்னால், அவரை உருவாக்கிய அண்ணாவின் சிலைக்கு முன்னால் வெற்றிபெற்றுள்ள திமுகவினர், கூட்டணிக் கட்சியனருக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறேன்” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக திமுக ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கழக தலைவர் ஸ்டாலின், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்றுள்ள மாபெரும் வெற்றியை, தலைவர் கலைஞர் அவர்களுக்கு சமர்ப்பித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,”