வெடிக்கும் விவசாயிகள் போராட்டம் : மத்தியப் பிரதேசத்தில் பலி!

public

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடெங்கும் விவசாயிகள் அரசிற்கு எதிராகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாகத் தமிழக விவசாயிகள் டெல்லிக்குச் சென்று மத்திய அரசிற்கு எதிராகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் 23.4.2017 தேதிவரை நடைபெற்றது. தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு உத்தர பிரதேச விவசாயிகள் நேரடியாக வருகை தந்து ஆதரவு தந்து போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை விவசாயிகள், தமிழக முதல்வரிடம் அளித்தனர். அந்த கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் போராட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் டெல்லியில் கூட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தமிழக விவசாயிகள் அறிவுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 32 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். சென்னை, சேப்பாக்கத்தில், வரும், 9ம் தேதி முதல், 32 நாட்கள், தொடர் போராட்டம் நடத்த, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் முடிவு செய்துள்ளது. இதில், சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் இரு விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்குச் சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் என்ற இடத்தில் விவசாயிகள் இன்று(6.6.2017) போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்து விட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர். அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ரட்லாம், நீமுச் மற்றும் மண்டாசாவூர் பகுதிகளில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *