வீரர் உடல் முன்பு செல்ஃபி எடுக்கவில்லை: மத்திய அமைச்சர்!

Published On:

| By Balaji

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கேரள வீரரின் உடல் முன்பு செல்ஃபி எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தவறான செய்திகளை பரப்புவதாக கேரள காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் . இதில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த குமார் என்ற வீரரும் உயிரிழந்தார். அவரது உடல் விமானத்தில் கொண்டுவரப்பட்டு அவரது சொந்த கிராமத்திலேயே பிப்ரவரி 16ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் கலந்துகொண்டார். இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர் வீரரின் உடல் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்டதாக சமூக வலைதளங்களில் அவரது புகைப்படம் வைரலானது. இதனால் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் செல்ஃபி எடுத்ததாக வெளியான புகைப்படம் பற்றி அல்போன்ஸ் விளக்கமளித்துள்ளார். கேரள டிஜிபிக்கு அவர் நேற்று (பிப்ரவரி 17) எழுதியுள்ள கடிதத்தில் “பாதுகாப்பு படை வீரர் வசந்த குமாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது, சவப்பெட்டி அருகே நிற்கும் போது என்னை சிலர் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படத்தை எனது ஊடக செயலர் முகநூலில் பதிவிட்டார்.

அந்த புகைப்படத்தை வைத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருக்கும் என்னை மையப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவது இரக்கமற்றது, சட்டவிரோதமானது. இந்த செயலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share