புல்வாமா தாக்குதலில் பலியான வசந்தகுமார் என்ற வீரரின் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் செல்ஃபி எடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புல்வாமாவில் பிப்ரவரி 14 அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்காக சுமார் 50 உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பதில் தாக்குதல் நடத்த இந்திய தரப்பு தயாராகி வருகிறது. இதற்காக ராணுவ படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, புல்வாமா தாக்குதலில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திரிகைபேட்டா கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் உயிரிழந்தார். அவரது உடல் விமானத்தில் கொண்டுவரப்பட்டு அவரது சொந்த கிராமத்திலேயே நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் கலந்துகொண்டார். அப்போது, வசந்தகுமாரின் உடல் முன்பு நின்று அமைச்சர் அல்போன்ஸ் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த செல்ஃபி படம் சமூக ஊடகங்களில் பரவியதும் அமைச்சருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.�,