வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி, ஆணையும் பெண்ணையும் உழைப்பை நோக்கித் துரத்துகிறது. குடும்ப வாழ்வின் தேவைகளும் மாறிவரும் மதிப்பீடுகளும் பெண்களை பல துறைகளில் முன்னேற்றியிருக்கிறது. உலகம் முழுவதும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்நிலையில், இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
உலகில் மற்ற நாடுகளைப் பார்க்கிலும், இந்தியாவில்தான் குறைந்த எண்ணிக்கையில் மகளிர் பணியாற்றுகின்றனர் என்று சர்வதேச தொழிலாளர் கழகம் தெரிவித்துள்ளது. பணியாற்றும் இடங்களில் பாலினச் சமநிலையை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
2005ஆம் ஆண்டு 37 சதவிகிதமாகவிருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதற்குக் காரணமாக, கல்வி கற்க ஆரம்பித்ததும் விவசாய வேலைகளில் பெண்களுக்கு நாட்டமின்றிப் போனதும் ஒரு காரணம். மிக முக்கியமாக, பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் தொல்லைகளும் பெண்கள் வேலைக்குப்போவது குறைந்துபோகக் காரணம் என்கிறார் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அனுராதா சாட்டர்ஜி.
திருமணத்துக்குப்பின்னர் வேலைக்குச் செல்வதை பல குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும், வீட்டு வேலைகளைச் செய்யவேண்டும் என்று சராசரி இந்திய ஆணின் எண்ணமும் ஒரு காரணம். அதுபோல, காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வரை தாமதமாக வேலை செய்வதும் பெண்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது.
ஆனால், பிற நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 185 பதிவுசெய்த நாடுகளில் 114 நாடுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 41 நாடுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
இது ஒருபுறம்மிருக்க, உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் ஆண்கள் விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள். நாளொன்றுக்கு அரை மணி நேரம்கூட அவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதில்லை. ஆனால், இதுவே செக்கோஸ்லோவேகியாவில் ஆண்கள் குறைந்தபட்சம் 100 நிமிடங்கள் வீட்டு வேலையைச் செய்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.�,