தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர, சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
விஸ்வ இந்து பரிஷத், பல்வேறு முழக்கங்களை முன்வைத்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரையைத் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை மார்ச் 20ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது. அமைதியாக உள்ள தமிழகத்தில் இந்த யாத்திரை மூலம் மத மோதல்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளதாக பல்வேறு கட்சிகளும் இந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது கேள்வி நேரம் முடிந்த பின்னர் எம்எல்ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் யாத்திரைக்குத் தமிழகத்தில் அனுமதி தரக் கூடாது என்பதை வலியுறுத்திச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முற்பட்டனர்.
எனினும், இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இந்திய முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த அவர்கள், “விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையைத் தமிழக அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த யாத்திரையைத் தடுத்தநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றோம். ஆனால், சபாநாயகர் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, நாங்கள் நான்கு பேரும் வெளிநடப்பு செய்துள்ளோம். நாளை காலை 9 மணிக்கெல்லாம் இந்த யாத்திரை தமிழக எல்லையைக் கடக்கவுள்ளது. ரத யாத்திரையைத் தமிழக அரசு தடுத்துநிறுத்தவில்லை என்றால் 20 அமைப்புகளின் தலைவர்களும் அங்கு சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக மக்கள் ஏன் ராம ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். இங்குள்ள பழனி முருகனின் ராஜ்ஜியத்தை பிகாரிலோ, உத்தரப் பிரதேசத்திலோ ஏற்படுத்த முடியுமா? சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை விஸ்வ இந்து பரிஷத் நடத்துகிறது. ஜெயலலிதா இருந்தவரை இதுபோன்ற மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவவில்லை. தமிழக அரசு கண்டிப்பாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
[சிறப்பு கட்டுரை: ரத யாத்திரைக்கு வலுக்கும் எதிர்ப்பு](http://minnambalam.com/k/2018/03/19/34)�,