சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கும் தற்போது புதிய கனெக்ஷன் உருவாகியுள்ளது.
விஷால் – அர்ஜுன் நடிக்க பி.எஸ்.மித்ரன் இயக்கி, டெக்னாலஜி திருட்டு குறித்துப் பேசி கோலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய படம் இரும்புத் திரை. ஆக்ஷன் டெக்னோ த்ரில்லர் வகைக் கதைக் களத்தைக் கொண்டு உருவான இந்தப் படம், கதையாகவும், டெக்னிகலாகவும் சிறப்பான படமாக அமைந்திருப்பதாகக் கூறி பலரின் பாராட்டையும் பெற்றது.
இதனால் அறிமுகப் படத்திலேயே கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார் இந்தப் பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன். விளைவு, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இரும்புத் திரையில் நடித்த அர்ஜுன் இதிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் படமொன்றுக்கு யுவன் இப்போதுதான் இசையமைக்கிறார்.
ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல் ரூபன் இதற்கு எடிட்டிங்கைக் கவனிக்கிறார். ரெமோ படத்தைத் தயாரித்ததன் வாயிலாக தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த 24 ஏஎம் ஸ்டூடியோஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் கேஜேஆர் ஸ்டூடியோஸும், 24ஏஎம் ஸ்டூடியோவும் இணைந்தே இதைத் தயாரிக்கவுள்ளதாக நேற்று (நவம்பர் 14) ட்விட்டரில் கூறியுள்ளது 24 ஏஎம் நிறுவனம்.
நயன்தாரா முன்னர் நடித்த அறம், தற்போது நடித்துவரும் ஐரா ஆகிய படங்களைத் தயாரித்த இந்த கேஜேஆர் ஸ்டூடியோஸ்தான், அஜித் – நயன்தாரா நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையையும் பெற்றுள்ளது எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.�,