திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர். மெரீனாவில் நடைபெறும் போராட்டத்திற்கு சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நடிகர்கள் சென்று போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நயன்தாரா, “நான் பிறப்பால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் இல்லை என்றாலும் உணர்வாலும் உள்ளத்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்பதில் பெருமையடைகிறேன். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் தமிழ் மக்களோடு உறுதுணையாக நிற்பேன். ” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பொன்வண்ணன், ஜல்லிக்கட்டுக்காக வரும் ஜனவரி 20ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் அனைத்து நடிக, நடிகைகளும் கலந்துகொள்ளவுள்ளனர். நாங்கள் மாணவர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு பின்னால் நின்று செயல்படுவோம் என்றும் தெரிவித்தார். நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றுவருவதால் தனது நிலையை உடனே அவர் மாற்றிக்கொண்டு நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளன் தான் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவர பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். இதன் மூலம் விஷால் மேல் உள்ள கோபம் மக்களுக்கு தணிந்துவிட்டதா என்பது மட்டும் தெரியவில்லை.�,