ஆர்யா – சாயிஷா திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் கோலிவுட் மற்றொரு திருமணத்திற்கு தயாராகிறது.
விஷால் தனது திருமணம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து மறுத்துவந்த நிலையில் ஜனவரி மாதம் அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளும் அர்ஜுன் ரெட்டி, பெல்லு சுப்புலு உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான அனிஷா அல்லா அதற்கு முன்பாகவே இருவருக்குமான காதலை வெளிப்படுத்தியிருந்தார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு அங்கே தான் தனது திருமணம் நடைபெறும் என விஷால் ஏற்கெனவே அறிவித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் மார்ச் 16ஆம் தேதி விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாகவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சண்டகோழி 2 படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்கில் தற்போது விஷால் நடித்துள்ளார். அயோக்யா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.�,