விவேகம் டீசர்: அஜித் – விஜய் ரசிகர்களுக்கான ட்விஸ்ட்!

public

‘விவேகம்’ திரைப்படத்துக்குப் பின்னால் பல நூறு கலைஞர்களின் உழைப்பு, அதுவும் பல்கேரியா போன்ற பனிப்பிரதேசத்தில் கொட்டப்பட்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள், வேலை செய்கிறார்கள். ஆனால், எவ்வித லாபமும் இல்லாமல் பல லட்சக்கணக்கானவர்களின் உழைப்பும் விவேகம் டீசர் வெளியான நேற்று (10.05.17) கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பின்தொடர்ந்த சிறிய பயணம் தான் இது.

விவேகம் டீசரை டிரெண்டிங் செய்வதற்கான அனைத்துத் தயார் நிலைகளுடன் அஜித் ரசிகர்கள் நேற்று மாலையிலிருந்தே காத்திருந்தார்கள். 12.01 மணிக்கு ரிலீஸானதும் வீடியோவைப் பல்வேறு டிவைஸ்களில் பார்க்க வேண்டும் மற்றும் லைக் – ஷேர் செய்ய வேண்டும் என்ற திட்ட வரைவுகளை வகுத்து ரசிகர்கள் பலருக்கும் அனுப்பிவிட்டனர். மொபைல் கேம் விளையாடும் இடத்திலும் அஜித் ரசிகர்கள் என்று ஒரு டீமை உருவாக்கி, கேம் வரை விவேகம் டீசரைக் கொண்டு சென்றனர். இப்படி ஒருபக்கம் திட்டங்கள் உண்டாகிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் ‘பைரவா’வுக்கு செய்த வேலைக்குப் பழிக்குப் பழி வாங்குவோம் எனச் சொல்லி அவர்கள் சில திட்டங்களை வகுத்தார்கள். விவேகம் டீசர் வீடியோவை டிஸ் லைக் செய்வதும், சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யும் லிங்க்கை ரிப்போர்ட் செய்வதும்தான் அவர்களது திட்டமாக இருந்தது.

ஆனால், இந்தத் திட்டங்களுக்கு மாறாக அஜித் ரசிகர்களிடம் வேறு திட்டம் இருந்தது. 10.30 மணியிலிருந்து #VolcanicVIVEGAMTeaserNight என்ற ஹேஷ்டேகுடன் பழைய படங்கள் மற்றும் படம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யத் தொடங்கினார்கள். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் முக்கியத்துவம் பெற்றது. டிரெண்டிங்கில் மேலே ஏறி வந்துகொண்டிருக்கும்போதே விவேகம் டீசர் லீக் ஆகிவிட்டது என்று ஒரு தகவல் பரவத் தொடங்கியது.

அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் அதை நம்பி அஜித்தின் விவேகம் டீசரை ஆன்லைனில் தேடினார்கள். கைக்குக் கிடைத்த சில ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டீசர்களை ஷேர் செய்து கொண்டிருந்தனர். அப்போது தான், சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களின் காவலனாகவும், விஜய் ரசிகர்களின் கெட்ட கனவாகவும் இருக்கும் கொக்கி குமாரு என்ற பேஜ் அட்மின்கள் மீண்டும் குமாரு ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் மீண்டும் வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் சார்பில் கிளப்பிவிட்டதுதான் இந்த டீசர் லீக் ஆன தகவல்.

ஆனால், இதை அறியாத பலரும் விவேகம் டீசர் லீக் ஆகிவிட்டது என ஹேஷ்டேகுடன் அப்டேட்களைப் பதிவு செய்ததால் ஹேஷ்டேகின் எண்ணிக்கை அதிகமாக இந்திய அளவில் ‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் டிரெண்டிங் ஆனது. அதேசமயம் உண்மையான விவேகம் டீசரை சத்யஜோதி ஃபிலிம்ஸின் சார்பில் வெளியிட யூடியூப் ரணகளமானது. அஜித் ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்வதும், விஜய் ரசிகர்கள் டிஸ் லைக் செய்து ரிப்போர்ட் செய்வதுமென நடைபெற்ற போட்டியில் டீசர் ரிலீஸான முதல் அரைமணி நேரத்துக்குள் ஐம்பதாயிரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்த விவேகம் டீசர், இரவு ஒரு மணிக்கு ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. அடுத்த நான்கு மணி நேரங்கள், அதாவது காலை ஐந்து மணிக்கு 8,27,991 பார்வையாளர்களைக் கடந்தது.

ஒரு டீசர் வெளியாவதற்குள் ஆன்லைனில் இத்தனை அலப்பறைகளைக் கூட்டியிருக்கிறார்கள் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் தரப்பும். ஆனால், சமயத்தில் ஏமாற்றிவிடும் டீசர்களைவிட இந்த கேம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. சரி, டீசர் எப்படி இருந்தது?

இயக்குநர் சிவா, தன்னை அஜித்தின் ரசிகர்களில் தலைமை ரசிகர் என மற்றுமொருமுறை நிரூபித்திருக்கிறார். அதி தீவிர அஜித் ரசிகன், அவரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டுமென நாள் முழுவதும் யோசித்து ஆசைப்படுகிறாரோ, அதேபோல அஜித்தை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். வழக்கமாக அஜித் புகுந்து விளையாடும் டபுள் கேம், டபுள் கெட்-அப் மற்றும் புஷ்-அப்ஸ், துப்பாக்கி சுடுதல், மிலிட்டரி கெட்டப்பில் அசால்ட்டாக நடந்து வருவது, கண்ணாடியை அணிவது, அமர்த்தலான குரலில் ஆழ்ந்த வசனம் பேசுவது என கலக்கியிருக்கிறார்கள். அதிலும், கடைசியில் முத்தாய்ப்பாக வரும் அந்த பைக் காட்சியில் கிளாஸாகவும், மரத்தை பஞ்ச் பேக் போல நினைத்துக் குத்தும் காட்சியில் மாஸாகவும் தனது டிராக்கில் விவேகம் எனும் ரயிலை நிறுத்திவிட்டார்கள்.

அலுவலக செட்டுக்கு எல்லாம் அதிக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவை உறுத்தலாக இல்லாமல் கிராஃபிக்ஸை லைவ் கேமராவில் எடுத்த காட்சிகளுடன் சேர்க்கும் வித்தையை பர்ஃபெக்டாக செய்திருக்கிறார்கள். இந்த ஒரு டீசர் அடுத்து விஜய்யின் 61ஆவது திரைப்படத்தின் டிரெய்லர் வரும்வரை அஜித் ரசிகர்களால் பேசப்படும். அதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இந்த டீசருக்கு இருக்கின்றன.

[விவேகம் டீசர்](https://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *