விவேகம்: கருத்து சுதந்திரத்தைக் கொல்லும் மிரட்டல்கள்!

Published On:

| By Balaji

கடந்த வியாழன் அன்று வெளியான அஜித்தின் விவேகம் திரைப்படம் வெளியாகி திரையுலகினராலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கமலஹாசன் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். அதேசமயம், இப்படத்தை சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில் எழுத்தாளர், சினிமா விமர்சகர் சாரு நிவேதிதா விவேகம் படம் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை காட்டமாக தெரிவித்திருந்தார். அதே போல் ‘ப்ளூ சட்டை’ என்று சொல்லப்படும் யூடியூப் விமர்சகர் மாறன், ‘விவேகம்’ திரைப்படத்தைப் பற்றியும் நடிகர் அஜித் பற்றியும் மிகக் கடுமையாக சாடியுள்ளார். இவரின் கடுமையான விமர்சனம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விமர்சனத்துக்கு ‘கோலி சோடா’ திரைப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் ஒரு வீடியோ பதிவின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார். விஜய் மில்டன் இதுகுறித்து தெரிவித்ததாவது, ** சினிமாவை விமர்சனம் பண்ண ஒரு புளூ சட்டை போட்டிருந்தா மட்டும் போதாது. அப்படம் குறித்த நிறைகுறைகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுமே தவிர அதன் குறைகளை மட்டுமே விமர்சனம் பண்ணுவது நல்ல விமர்சனம் அல்ல. ஒரு படத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஜாம்பவான்களான பாலசந்தர், பாரதி ராஜா போன்ற படைப்பாளர்களும் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக தந்ததில்லை. ஒரு படத்தை முழுமையாக படைப்பது அவ்வளவு எளிதில்லை. அதனால் ஆரோக்கியமான முறையில் விமர்சனத்தை வைப்பது நல்லது** எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தன் முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில், **அஜித் ரசிகர்களுக்கும் என் நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் அஜித் சாரின் ‘விவேகம்’ திரைப்படத்தைப் பார்த்தேன்; அவரின் கடின உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன். இத்திரைப்படத்தைப் பற்றி பலரின் விமர்சனங்களையும் நான் பார்த்தேன் எல்லோரும் படத்தின் சாதக, பாதகங்களைக் கூறினார்கள். ஆனால் (ப்ளூ சட்டை) மாறனின் விமர்சனத்தைப் பார்த்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இத்திரைப்படத்தில் பல நல்ல காட்சிகள் இருக்கின்றது. அற்புதமான ஒளிப்பதிவு போன்ற பல கடினமான உழைப்பைக் கொடுத்து படக்குழு உழைத்திருக்கின்றனர். மாறன் கண்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை, அதை விட்டுவிட்டுத் தனி நபர் தாக்குதலாக நடிகர் அஜித்தையும் அவரின் ரசிகர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். இத்தகைய (ப்ளூ சட்டை)மாறன் விமர்சனத்துக்கு அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாறனுக்கு விமர்சனம் செய்யும் எந்த அருகதையும் இல்லை** எனப் பதிவிட்டிருந்தார் லாரன்ஸ்.

​இப்படி திரை நட்சத்திரங்கள் விமர்சகர்களுக்கு எதிரான தங்களது கருத்தை ஒரு தளத்தில் வைத்திருக்க, அஜித் ரசிகர்களில் சிலர் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். அதுதான் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல். விவேகம் படம் குறித்து Madras Central யூடியூப் பக்கத்துக்கு அவர் அளித்துள்ள விமர்சனத்தில், **விவேகம் படம் பார்த்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. படமுழுக்க அஜித் எந்நேரமும் சுட்டுக்கொண்டே இருக்கிறார். 120 கோடி பட்ஜெட் படமென கேள்விப்பட்டேன். எல்லாம் புல்லட் வாங்குன செலவு போல இருக்கு. அஜித் ரசிகர்கள் மட்டுமே பார்க்கலாம். மத்தபடி எல்லாரும் பார்க்கும்படியான படமாக இல்லை. படம் பார்த்த அஜித் ரசிகர்களை பார்த்தேன் எல்லாம் தியானம் செய்யும் மனநிலையில் அமைதியா இருந்தாங்க. படத்துலம் ஏன் திரில் இல்லன்னா எதுவுமே நம்புற மாதிரி இல்லை. ஒரே கோமாளித்தனமாக இருக்கிறது. படத்தில வில்லனே இல்லை; நண்பனே வில்லன். அந்த வில்லன் படத்தில் அடிவாங்கியது போக அந்தகால சரித்திர படம் போல அஜித்தைப் பற்றி புகழ்ந்து கொண்டே இருக்கிறார். படம் முழுக்க போரடிக்குது** எனச் சொன்னார்.

சாரு எப்போதும் தன்னுடைய படைப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பாத்திரங்களை படைப்பவர். அதேபோல் பெண்களை புதுமை பெண்ணாக படைப்பதோடு அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புவர். அந்த வகையில் விவேகம் படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் நடித்திருப்பது குறித்து பேசியுள்ள அவர், **அஜித்தின் மனைவியாக நடித்திருக்கிறார் காஜல். பெண்கள் எல்லாம் தோசை சுடுவதற்கும், பாட்டு பாடுவதற்குமாகவும் ஆண்கள் எல்லாம் சண்டை போடுவதற்குமாகவும் காட்டியுள்ளார். இந்த காலத்திலேயும் இப்படி காட்டியுள்ளார். அதோடு பெண்களுக்கு சமர்ப்பணம் என கடைசியில் தெரிவித்துள்ளார். இது எவ்வளவு பெரிய அபத்தம். அஜித் ரசிகர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படமாக மட்டுமே இருக்கிறது. இப்படத்தில் அனிருத்தின் மெட்டல் இசை நல்லா இருக்கு. படம் மிகப்பெரிய போரிங். இப்படத்தைப் பார்க்கும்போது தமிழ் சினிமா எதை நோக்கி போகிறது எனத் தெரியவில்லை** என்பதாக அவரது விமர்சனம் இருக்கிறது.

இவரின் இந்த விமர்சனத்திற்கும் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. இது குறித்து சாரு நிவேதிதா தனது இணையதளத்தில் ஃபோனில் ஆபாசமாக திட்டியது குறித்தும், கொலை மிரட்டல் விடுத்தது குறித்தும் தெரிவித்துள்ளார். மேலும் **எனக்கே இப்படி என்றால் ப்ளூ ஷர்ட் விமர்சகருக்கு எத்தனை கொலை மிரட்டல் வந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். சினிமா இங்கே மதம்** எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டபோது முதலில் ஃபோன் ரிங்க் ஆகி நின்றுவிட்டது. பிறகு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதும் தொடர்புகொண்ட அவர்,**அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ஃபோனில் திட்டி வருகிறார்கள் அதனால் தான் உங்கள் ஃபோனை எடுக்க முடியவில்லை** எனத் தெரிவித்தார்.

கொலை மிரட்டல் குறித்து கேட்ட போது,**கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான். கொலை மிரட்டல் விடுத்தவர்களை நான் போலீஸில் புகார் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களுக்கு முதிர்ச்சி இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் வசை பாடத்தான் செய்வார்கள் அதை ஒரு பொருட்டாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம்** எனத் தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக விமர்சனங்களை எழுதிவரும் சுரேஷ் கண்ணனிடம் இதுபற்றி பேசிய போது, **அரசியல், சினிமா போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து யார் வேண்டுமேனாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் சாருவின் இந்த கருத்துக்கு இத்தகைய விமர்சனங்களும், கொலை மிரட்டலும் வந்திருப்பது பெரும் அபத்தமாக இருக்கிறது. இந்த மாதிரியான சமூகத்தில் வாழ்வது குறித்து நாம் தான் வெட்கப்பட வேண்டும்** எனத் தெரிவித்தார்.

மேலே குறிப்பிட்டிருப்பதில், சாரு நிவேதிதாவின் விமர்சனமும் முழுவதுமாய் குற்றச்சாட்டுகள் நிரம்பியுள்ளதாக இருக்கிறது. ஆனால், கருத்துச் சுதந்திரத்துக்கான எல்லையை அவர் தாண்டவில்லை. ஆனால், ப்ளூ ஷர்ட் விமர்சகர் என அழைக்கப்படும் மாறன் சினிமா விமர்சகர், பொது விமர்சகர் என்ற எல்லா எல்லைகளையும் தாண்டிச் சென்று தரமற்ற வார்த்தைகளால் அஜித்தையும் அவரது ரசிகர்களையும் குதறியிருக்கிறார் என்பதே உண்மை. அப்படிப்பட்ட நிலையிலும் காவல் துறையின் மூலம் சட்டத்தை நாடி இதற்கான தீர்வைப் பெற வேண்டுமே தவிர, மொபைல் நம்பரை ஷேர் செய்து அநாகரிக வார்த்தைகளால் திட்டுவது, கொலை மிரட்டல் விடுப்பது என செயல்பட்டால் தற்போது அஜித் ரசிகர்கள் பொது ரசிகர்களால் பந்தாடப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ரசிகர்கள், ரசிகர்களாக மட்டுமே இருக்கவேண்டும். அடியாட்களைப்போல செயல்படக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக இவர்களை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel