விவாதக் களம்: அரசியல் நிர்பந்தத்தின் வாடை வீசும் தீர்ப்பு!

Published On:

| By Balaji

தீர்ப்பும் அதன் பொருளும்

**நீதிபதி லோயாவின் மரணம் குறித்த தீர்ப்பின் விளைவுகள் என்ன? – நேற்றைய பதிவின் (https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/04/23/10) தொடர்ச்சி**

*உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நீதிபதி லோயா மரணத்தின் மீதான அரசியல் புத்துயிர் பெறுமா அல்லது அடங்கிப்போகுமா என்பது குறித்து முன்னணி வழக்கறிஞர்கள், அறிஞர்களின் கருத்தை [தி பிரின்ட் இணைய இதழ்](https://theprint.in/) வெளியிட்டுள்ளது அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது:*

**கேள்விகளுக்கு விடைகள் தேவை**

*பல்வந்த் ஜாதவ், துணைத் தலைவர், மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில்*

நீதிபதி லோயாவின் மரணம் குறித்த விசாரணை அளவற்ற முக்கியத்துவம் கொண்டதாகும். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பாஜக தலைவர் அமித் ஷாவின் சந்தேகத்துக்குரிய பாத்திரம் மற்றும் இந்த வழக்கில் காலப்போக்கில் எழுந்துள்ள முறைகேடுகள். லோயா எனது சிறந்த நண்பர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு லோயா எப்போதுமே எப்படி நடந்துகொண்டார் என்பதற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

லோயா இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி பிரமாணம் ஏற்கும் விழாவில் அமித் ஷா பங்கெடுத்தார். அவர் பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக மேடையில் அமர்ந்திருந்தார். இதை நிரூபிக்கப் புகைப்படச் சான்றுகள் உள்ளன. இது அரசு பொது நடத்தை நெறிமுறை சம்பிரதாயங்களுக்கு (protocol) முற்றிலும் அப்பாற்பட்டதாகும். அதிலும் குறிப்பாக, அமித் ஷா தன் செல்வாக்கைச் செலுத்த இயலும் என சந்தேகிக்கப்பட்டதால் சோஹ்ராபுதின் ஷேக் வழக்கு குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டிருந்தது என்பதைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது இது பொது நடத்தை நெறிமுறை சம்பிரதாயங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகும். இது அரசியல் நிர்பந்த வாடை வீசும் பாரபட்சமான தீர்ப்பாகும். விசாரணையொன்று தேவை. எனது நண்பரின் சந்தேகத்துக்கிடமான மரணம் பற்றிய கேள்விகளுக்கு எங்களுக்கு விடைகள் தேவை.

**ஆழமான கேள்விகளை எழுப்புவதற்கான தொடக்கப் புள்ளி**

*ஹிலால் அஹ்மத், துணைநிலைப் பேராசிரியர், CSDS*

நாம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அரசியல் அறிக்கைகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இவற்றை அவற்றின் முழுமையிலும், அவற்றின் குறிப்பான பின்புலங்களிலும் புரிந்துகொள்ள அவசியம் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகள் வரையறுக்கப்பட்ட முறையிலான ஓர் எதிர்வினையாகும். ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் நியாயமான சட்ட மற்றும் அரசியல் சட்டப் பிரச்சினைகள் சட்ட ரீதியிலான மொழியில் விளக்கம் பெறுகின்றன. ஆனால், அரசியல் அறிக்கைகளும் அரசியல் பொருட்படுத்துதல்களும் அத்தகைய வரம்பை முற்றிலுமாகச் சார்ந்திருப்பதில்லை.

எனவே, அரசியல் ரீதியான விளக்கங்கள், சட்ட ரீதியான விளக்கங்களுக்கு வழிகாட்டும் பரந்த சித்தாந்தக் கோட்பாடுகளை எழுப்புகின்றன. இந்த அர்த்தத்தில், ஒரு விஷயத்தில் நீதித் துறை முன்வைக்கும் அர்த்தங்களை, பொருட்படுத்துதல்களை அரசியல் ரீதியான அர்த்தங்களோடு ஒப்பிடுவது தவறு.

நீதிபதி லோயாவின் மரணம் மற்றும் எத்தகைய சூழ்நிலைகளில் அது நிகழ்ந்தது என்பது பற்றிய விவாதம் நிச்சயம் அரசியல் ரீதியில் அதைப் பொருட்படுத்தப்படுவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அவர் மர்மமான சூழ்நிலைகளில் இறந்ததும் மூத்த அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்த வழக்குகளில் அவர் தொடர்புகொண்டிருந்ததும் அதற்கு வழிவகுக்கின்றன.

ஆனால், நீதித் துறை பக்கம் முற்றிலும் தவறு கிடையாது. ஏனெனில், ஒரு விவகாரத்தில் நீதித் துறை இடையீடு செய்யும் விதத்துக்கான தர்க்கத்தையே அது பின்பற்றியது. தவறு ஒன்றும் நடக்கவில்லை எனச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றிய ஆரவாரத்தையும் தாண்டி நாம் அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும். இந்தச் சம்பவத்தைச் சுற்றி நிகழ்ந்துள்ள அரசியலின் பொருள் என்ன என்பது குறித்த நம் சொந்த முடிவுகளுக்கு நாம் வர வேண்டும். இத்தகைய பரந்த பின்னணியில், கட்சிகள் எழுப்பும் பாரபட்சமான கேள்விகளுக்குப் பதிலாக, இந்தத் தீர்ப்பானது இந்தச் சம்பவம் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்ப ஒரு தொடக்கப் புள்ளியாக விளங்குகிறது.

**கவலைகளுக்கு முடிவுகட்டும் வாய்ப்பை அரசு இழந்துவிட்டது**

*பிரித்விராஜ் சவான், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர், காங்கிரஸ் எம்.எல்.ஏ*

சுதந்திரமான விசாரணை ஒன்றுக்கான தேவையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிராகரித்தபோதிலும் நீதிபதி லோயா மரணத்தைச் சுற்றி நடைபெறும் அரசியல் முடிவுக்கு வராது. ஏனெனில், இவ்வழக்கில் புலனாய்வு நடத்தப்பட்ட விதம் குறித்து ஆழ்ந்த சந்தேகங்கள் நிலவுகின்றன. இப்போதுதான் ஊகங்கள் அதிகரிக்கும்.

இந்தக் குடும்பத்தின் மீது நிர்பந்தம் எதுவும் நிலவுகிறதா என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை. சாதகமான தீர்ப்பொன்றைத் தரும்படி நீதிபதி லோயா மீது நிர்பந்தம் இருந்ததாகக்கூட வதந்திகள் நிலவின. இவையனைத்தையும் பற்றி இன்னமும் தெளிவில்லை.

நீதிபதி லோயாவின் மரணம் குறித்த அனைத்துக் கவலைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் இழந்துவிட்டது. அரசாங்கம் சுதந்திர விசாரணையொன்றை நடத்த, தாங்களே தேர்ந்தெடுத்த நீதிபதியொருவரை நியமித்திருக்கலாம். மரணம் இயற்கையானது என்றும் அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லையென்றும் அவர்கள் உறுதியாக இருந்தால் விசாரணையும்கூட அதையே தெரிவித்திருக்கும். அது அனைத்துச் சந்தேகங்களையும் துடைத்திருக்கும்.

**காங்கிரஸின் நிலைப்பாடு அரசியல் சந்தர்ப்பவாதம்**

*அபூர்வா விஸ்வநாத், சிறப்பு நிருபர், தி பிரின்ட்*

நீதிபதி லோயாவின் மரணத்தை ஒட்டிய சர்ச்சையைப் பிடித்துக்கொண்டு முன்னேறியது எதிர்க்கட்சியினர் அல்ல; ஊடக அறிக்கைகள். குறிப்பாக கேரவன் பத்திரிகையில் வெளிவந்த அறிக்கைகளே, புதிய விசாரணைக்கான அடிப்படையாக ஆயின.

ஊடகங்கள் எழுப்பிய கேள்விகள் இறுதியாக பாஜக தலைவர் அமித் ஷாவைக் கீழே தள்ளக்கூடும் என்பதைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது இந்த விஷயத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு எனத் தோன்றுகிறது.

காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமிடையிலான அரசியல் தாக்கத்தையும் தாண்டி, இந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதித் துறையின் அக நெருக்கடியை மீண்டும் தீவிரமடையச் செய்யலாம்.

மூத்த நீதிபதிகள் நான்கு பேர் ஜனவரி 12 அன்று கூட்டிய பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்புமளவுக்கு இது முக்கியமானதாகக் கருதப்பட்டது என்பதை நினைவில் கொள்க.

இது பாஜகவை ஈடுபடுத்தும் அரசியலோடு எந்த அளவுக்குத் தொடர்புடையதாக உள்ளதோ… அந்த அளவுக்கு இந்தத் தீர்ப்பு எந்த வெளிப்புறச் சோதனையும் நடக்கவிடாமல் நீதித் துறை தன்னை இழுத்து மூடிக்கொள்வதற்கான எடுத்துக்காட்டும் ஆகும்.

நீதித் துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்படும்போது சுதந்திரமான நீதித் துறையின் நலனில் அது அவர்களுக்கு உதவும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், அத்தகைய கேள்விகளை எழுப்புவது இழிவான செயல் என்றும் அது மேலும் கூறியது.

நீதிமன்றத்தின் கருத்துகள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் நீதிபதிகளின் நிலைக்கு மாறானதாக உள்ளன. சென்ற மாதம் மட்டுமே மூன்று நீதித் துறை அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் தனக்கு எதிராக மிகவும் முக்கியமான பிரச்சினைகள் எழுப்பப்படும்போதும் தன்னை விமர்சனத்திலிருந்து காத்துக்கொள்வது தொடர்கிறது.

மேலும், நீதிமன்றம் தன் தீர்ப்பில், பொதுநல வழக்கு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மனுதாரர்களைச் சுதந்திரமான நீதிமன்றத்தின் இமேஜைக் கெடுக்கக் கிளம்பியுள்ள சுயநல நாட்டம் கொண்ட குழுவினர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதே நீதிமன்றத்துக்கு முன்பு அற்பமான காரணங்களுக்காக பொதுநல வழக்கு தொடர்ந்தமைக்காக முன்பு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நபர் ஒருவரின் பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த வழக்கு தலைமை நீதிபதியின் அதிகாரங்கள் சம்பந்தப்பட்டது. வழக்கை வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே விசாரித்த பிறகு இதே பெஞ்ச் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பொதுநல வழக்குகள் தொடர்பான இந்த இரட்டைப் பேச்சும் மனுதாரர்களைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பது கவலைக்குரிய விஷயங்கள்.

நீதிபதி செலமேஷ்வரும் இதர மூன்று நீதிபதிகளும் எழுப்பிய கேள்விகள் இவையே. எல்லாமே இப்போது அவர்களுடைய கருத்துகள் சரியானவை எனக் காட்டுகின்றன.

*(தொகுப்பு: தி பிரின்ட்டில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தீக்ஷா பரத்வாஜ், தல்ஹா அஷ்ரப்)

நன்றி: [theprint.in](https://theprint.in/talk-point/after-the-supreme-court-judgment-will-politics-over-death-of-judge-loya-revive-or-subside/50980/)

**தமிழில்: பா.சிவராமன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel