மீஞ்சூர் கோபி என்ற பெயரின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான ந.கோபி நயினார் இயக்கியிருக்கும் திரைப்படம் அறம். கத்தி திரைப்படத்தின் கதை என்னுடையது என்று முருகதாஸுடன் அவர் நடத்திய போராட்டம் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமான கோபி நயினார், இனி விவசாயிகளின் வலியைச் சொன்ன திரைப்படக் கலைஞர் என்பதன் மூலம் அறியப்படுவார் என்பது அறம் டீசரின் மூலம் தெளிவாகிறது.
இன்று(05.04.17) மாலை 5 மணிக்கு வெளியான அறம் திரைப்படத்தின் டீசரை, விவசாயத்தைக் காப்பாற்ற(அல்லது மக்களை உணவுப் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற) போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு சமர்ப்பணம் செய்வதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். எத்தனையோ படங்களை, அப்போது நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்டவர்களுக்காக சமர்ப்பணம் செய்வது சினிமாவின் வழக்கம். ஆனால், இந்த காரணத்துக்காகவே ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் அல்லது இப்படித்தான் படம் எடுக்கவேண்டும் என்றதன் அடிப்படையில் உருவாகியிருக்கும் அறம் திரைப்படம் தனித்தே நிற்கிறது. மொத்தமாக 5 வசனங்கள் அறம் திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்றிருக்கின்றன. முதலில் டிவி சேனல்களின் செய்தித் தொகுப்பாளர்கள் **திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டூர் கிராமத்தில் கூலி விவசாயியின் மகளான** எனப் பேசத் தொடங்கும்போது **ம்மா. நிறுத்தும்மா. இங்க எங்கம்மா விவசாயம் இருந்துது?** என்ற வசனத்துடன் தொடங்கும் டீசரில்
**காலம் காலமா சோறுபோட்ட நிலம் கைல இல்லை.**
**நாம எல்லாம் தரைல போட்ட மீனாயிட்டோம். தாகம் எடுத்து சாகுறத தடுக்குறதுக்கு இந்த உலகத்துல என்னம்மா மருந்து இருக்கு?**
**ஜாஹே ஜஹாஜே அச்சா. கேக்க வந்த எங்களை எல்லாம் கன்னத்துல வெச்சா**
என விவசாயிகளும் பொதுமக்களும் பேசும் வசனங்கள் வர, கடைசியாக நயன்தாரா பேசும் வசனம் **முன்னேறி அடிக்கிறது தான் வீரம். என் போராட்டமே இந்தப் புரிதல் தான்** இடம்பெறுகிறது.
இந்திய நாட்டில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் எல்லாக் குறைகளைப் பற்றியும் இந்தத் திரைப்படம் பேசுகிறது. வரண்டுபோன விளைநிலங்கள், நஞ்சாகிப் போன குடிநீர், அதன்பின் படையெடுக்கும் தொழிற்சாலைகளின் அரிப்பு என பின்னணி கொண்ட அறம் திரைப்படத்துக்கான சிறந்த டீசராக இந்த டீசர் இருக்கிறது. டீசரைப் பார்க்க [அறம் டீசர்](https://www.youtube.com/watch?v=YXMYS-pwU7Y)�,