கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்குள்ள சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடிக்கு மேலான இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
1924ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப் பெரிய மழை வெள்ளத்தால் அம்மாநிலத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 2,80,442 விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பயிர் உற்பத்தியைப் பொறுத்தவரையில், 45,988.50 ஹெக்டேர் அளவிலான பயிர்ச் சேதமும், அதனால் ரூ.1,007 கோடி மதிப்பிலான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. கால்நடை மற்றும் பண்ணைத் தொழிலில், ஒரு லட்சம் பசுக்கள், நான்கு லட்சம் கோழிகள், ஒரு லட்சம் பன்றிகள் மற்றும் ஒரு லட்சம் ஆடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கேரளாவின் 14 மாநிலங்களிலும் 1,14,000 ஏக்கர் அளவிலான விவசாய நிலமும், தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 45,000 ஏக்கர் அளவிலான அரிசி சாகுபடி, 1,500 ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள், 17,700 ஏக்கர் அளவிலான தென்னை மரங்கள், 1,300 ஏக்கர் அளவிலான தென்னங்கன்றுகள், 10,000 ஏக்கர் அளவிலான காய்கறிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. 75,000 ஏக்கர் அளவிலான மிளகுக் கொடிகள், 27,000 ஏக்கர் அளவிலான ரப்பர் மரங்கள், 15,000 ஏக்கர் அளவிலான ஜாதிக்காய், 12,000 ஏக்கர் அளவிலான கொக்கோ மரங்கள், 9,000 ஏக்கர் அளவிலான பாக்கு மரங்கள் போன்றவற்றையும் இந்தப் பெரு வெள்ளம் விட்டுவைக்கவில்லை. இந்த விவரங்களை அம்மாநிலத்தின் வேளாண் துறை வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தின் மொத்த வருவாயில் விவசாயம் வாயிலாக 20 சதவிகித வருவாய் கிடைக்கிறது. இதுபோன்ற சூழலில் வெள்ள பாதிப்பால் அம்மாநிலத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக அசோசேம் கூட்டமைப்பு தனது மதிப்பீட்டில் கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அம்மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி வரையிலான இழப்புகள் ஏற்படும் என்று தெரிவித்திருந்தது.�,