விவசாயத்தை மட்டும் நம்பி வாழமுடியாது! – அபர்ணா கார்த்திகேயன்!

public

ஒருவர் முழுநேர விவசாயியாக இருந்து, போதுமான பணம் சம்பாதிப்பது சாத்தியமா? இதோ, அவர்களைப் பாருங்கள்” என, அவரது விவசாய நிலத்தில் நடந்தபடியே பனைமரத்தின்கீழ் இருக்கிற மனிதர்களைக் காட்டுகிறார் ஜெயபால். இவர்கள் யாரும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறவர்கள் அல்ல . ஒருவர் டிராக்டர் ஓட்டுகிறார் மற்றவர் படகு கட்டுமானப் பணிக்காக லாரியில் பொருட்களைக் கொண்டுசேர்க்கும் வேலை செய்கிறார். நான், இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் மதுரையில் இருக்கும் தங்கும் விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக இருக்கிறேன் .

இப்படிச்சொல்லும் ஜெயபால், மதுரை மாவட்டத்திலுள்ள நடுமுதலைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனது தந்தை சின்னையாத் தேவர் வழிவந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தோடு, இரு குத்தகை நிலங்களையும் கொண்டவர். எப்போதும் சந்தையில் தேவையாக இருப்பதும், எப்போதாவது விதைக்கிற விவசாயிக்குப் பலன் தருவதுமான நெற்பயிரை வருடம் மூன்று போகம் பயிரிடுகிறார். ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் செலவிட்டாலும் கிடைப்பது சொற்ப லாபமே. இதற்காக அவரும் அவருடைய மனைவி போதுமணியும், ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. “ஒரு நபருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வேலை செய்தால் கிடைப்பது வெறும் 9.25 ரூபாய் மட்டுமே! இந்நிலையில், எனது மகன்களும் ஏன் இந்தத் தொழிலே செய்யவேண்டும்?” எனக் கேட்கிறார் ஜெயபால்.

தமிழ்நாட்டில் வருமானத்துக்கான, முழுநேரத் தொழிலாக விவசாயம் இனி நீடிக்கப் போவதில்லை. அதாவது இனி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ முடியாது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 8.7 இலட்சம் விவசாயிகள் முழுநேர விவசாயப் பணியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களில் பலர், கடன் தொல்லையால் நிலத்தை இழந்து விவசாயத்தைக் கைவிட்டிருக்கிறார்கள் . வேறு சிலர், தொழிலுக்காகப் புலம் பெயர்ந்துவிட்டனர். இதே காலகட்டத்தில், விவசாயக் கூலிகள் எண்ணிக்கை 9.7 லட்சமாக உயர்ந்துள்ளது.

இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் ஜெயபால் விவசாயத்தையும், விவசாய நிலத்தையும் நேசிக்கிறார். 5000 ஏக்கர் விளைநிலம் கொண்ட தனது ஊர்பற்றிய பெருமை, அந்த 36 வயது விவசாயிக்கு இருக்கிறது. அவரால் வெற்றுக் காலோடு, எந்தவிதத் தடுமாற்றமுமின்றி வயல் வரப்புகளில் நடக்க முடிகிறது. அவரோடு சென்ற நான் தடுமாறி, கீழே விழப்போனதைப் பார்த்து வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் சிரித்தனர். அப்போது மணி 11தான் ஆகியிருந்தது. அப்போதே அப்பெண்கள் வீட்டில் மூன்று மணி நேரம், வயல் களையெடுப்பில் மூன்று மணி நேரம் என ஆறு மணி நேரம் வேலை செய்திருந்தனர்.

பருவம் தவறி, டிசம்பர் மாதம் பெய்த மழையால் அக்கிராமத்தின் கண்மாய்கள் நிரம்பியிருந்ததோடு, மலைக்குன்றுகள் பசுமையாகக் காட்சியளித்தன. அந்நிலப்பரப்பு தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகளில் வருவதுபோல் இருந்தன.

மேலும் தொடர்ந்த ஜெயபால், “விவசாயத்துக்கு கடுமையான உழைப்பு மட்டுமே போதுமானதாக இல்லை . புதிய ரகப் பயிர்களை விதைத்துப் பார்க்கவேண்டும். பரிசோதனை முயற்சிகளுக்கான துணிச்சல் அவசியம் . நான்கு வருடங்களுக்கு முன், அப்படியொரு முயற்சியாக ‘அக்சயா’ என்ற நெல் வகையைப் பயிரிட்டேன் . ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அறுவடை செய்யமுடிந்தது. விலையும் ஒரு மூட்டைக்கு 1500 ரூபாய் கிடைத்தது. அதன்பின், ஒட்டுமொத்த கிராமமும் அதேவகை நெல்லைப் பயிரிட விலை சரிந்துபோனது . இந்த வருடம் பெய்த பெருமழையால், தமிழகம் முழுவதும் நெற்கதிர்கள் மழையால் சேதமடைந்திருப்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கலாம்” என்கிறார்.

வயலிலிருந்து வீடு செல்லும் வழிநெடுக மழை, சூரியன், நிலம், நீர், கண்மாய் என அவருடைய வாழ்வுக்கும் உணவுக்கும் ஆதாரமானவற்றைப் பற்றியே பேசிக்கொண்டு வருகிறார் .

அவர்தம் நிலத்தில் பயிரிடும் விதைகளையும், உரங்களையும் செக்கனூரணியிலுள்ள கடையில்தான் வாங்குவதாகத் தெரிவிக்கிறார். ஓட்டல் நீச்சல்குளத்தில் செலவிடும் நேரம்போக, மீதி நேரத்தையெல்லாம் நீர் பாய்ச்ச, உரமிட, ஆடுமாடு மேய்க்க என விவசாயத்துக்காகவே செலவிடுகிறார்.

இப்படி நாளுக்கு ஒன்பது மணிநேரம், வாரத்துக்கு ஆறு நாட்கள் ஓட்டலில் கழிக்கும் ஜெயபால், தினமும் காலை இரண்டு மணிநேரமாவது வயலில் நிச்சயம் செலவிடுகிறார். அதிகாலை நேர வேலையாக இருந்தாலும், மாலை ஐந்து மணிக்கு ஓட்டலின் சீருடையை மாற்றிக்கொண்டு கிளம்பினால் அவருடைய வண்டி, நேரே வயலுக்குத்தான் செல்லுமாம். ஓட்டலில் அழகான நீச்சல் குளத்தில் நின்று, வரும் விருந்தினர்களுக்கு வழிகாட்டும் அந்த வேலையும் தனக்குப் பிடித்திருப்பதாகவே கூறுகிறார். ஏனெனில், ‘விளையாட்டுதான் எல்லாம் என்றிருந்த வாழ்வில் இன்றைக்கு விளையாட்டோடு தொடர்புடைய ஒரே விஷயமாக இந்த வேலை இருக்கிறது’ என்கிறார் ஜெயபால் .

ஜல்லிக்கட்டுக்குப் பெயர்போன மதுரைப் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஜல்லிக்கட்டு வீரர். மேலும் குண்டு எறிதல், கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகள் வென்றிருக்கிறார் . அவர் பெற்ற சான்றிதழ்களை அவர் மனைவி பீரோவில் அடுக்கி வைத்திருக்கிறார் . குறைந்த பரப்புகொண்ட அந்த வீடு, இரண்டு அறைகள் கொண்டது. முதல் அறை செவ்வக வடிவில் சற்றே பெரியதாகவும், மற்றொரு அறை சமையலறையாக மிகச் சிறியதாகவும் இருந்தது. மாடத்தில் துணிகளும், பைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. 2002ல் நடந்த திருமணப் புகைப்படங்கள் வெள்ளையடிக்கப்பட்ட சுண்ணாம்புச் சுவரில் மாட்டப்பட்டிருக்கின்றன.

உற்சாகமாக, தான் வாங்கிய பரிசுப் பொருட்களை பட்டியலிடுகிறார் ஜெயபால்.

“தங்கக்காசு, குத்துவிளக்கு, டிவி, சைக்கிள், ஏன் நீங்கள் சாய்ந்து அமர்ந்திருக்கும் கிரைண்டர்கூட நான் ஜெயித்து வாங்கியதுதான்”என்று. “2003-2007 வரை மழை பொய்த்தபோது இரண்டு சிறு குழந்தைகளையும், மனைவியையும் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டநிலையில் கூலி வேலை செய்தேன். பிறகு, 2008ல் மீண்டும் குடும்பத் தொழிலுக்கே வந்துவிட்டேன். அதேநேரம், ஓட்டல் வேலையும் கிடைத்தது. இங்கே ஒரு தொழில் செய்வது போதுமானதாக இல்லை” என்கிறார்.

ஆணாகப் பணம் சம்பாதிப்பது கடினமானதாக இருக்கும்போது, பெண்கள் நிலை மிக மோசமாக உள்ளது. நெடுநேரம் வேலை செய்தாலும் ஜெயபால் மனைவி போதுமணிக்கும், அம்மா கண்ணம்மாவுக்கும் மிகக் குறைந்த கூலியே கிடைக்கிறது. அவர்கள் காலை ஐந்து மணிக்கு வேலையைத் துவங்குகின்றனர். எட்டு மணியிலிருந்து மூன்று மணிவரை வயலிலும், பிறகு கால்நடைகளுக்குப் புல் அறுப்பது, விறகு பொறுக்கி வருவது, ஆடு மாடுகளை மேய்ப்பது பிறகு வீட்டில் சமைப்பது என அவர்கள், அதிக நேரம் கடுமையாக உழைக்கிறார்கள். “அவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் வேலைசெய்து வீட்டை நடத்தமுடியாது” என்கிறார் ஜெயபால்.

வயதுவந்தோர் உள்ளிட்ட 1500 குடும்பங்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது .ஆனால், அடுத்த தலைமுறைக் குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள். அவர்கள், படித்து வேலைக்குப் போக விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்கள் பெற்றோர் குறைந்த வருமானத்தைக் கொண்டு சிரமப்படுவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். விவசாயக் கூலிகள் தினமும் வெறும் நூறுரூபாயே வருமானமாகப் பெறுகிறார்கள். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 140 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த வேலையும் பயிரிடும் காலங்களில் தரப்படுவதால் விவசாயக் கூலிகள் கிடைப்பது சிரமமாகி, அதிகக் கூலி கொடுத்து சமயத்தில் சாப்பாடு, தேநீர், நொறுக்குகள் கொடுத்து வேலைக்கு ஆள் பிடிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் கவலையோடு .

அவரது வண்டியில் ஊரைச் சுற்றிக் காண்பித்தபடியே ஜெயபால் சொன்னார், “கடன் வாங்குவது எளிது. அறுவடை மட்டும் சரியாக நடக்கவில்லை என்றால் கடனில் மூழ்கிவிட வேண்டியதுதான். குத்தகை நிலத்துக்கான வாடகை, அன்றாடச் செலவுகள் என ஏராளம் உண்டு. என் அப்பா அவர்கள் உறுதியானவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருந்தனர் . அவர்கள் அவர்களுக்கான வரப்புகளைக் கட்டியிருந்தனர். ஆனால், எங்கள் தலைமுறைக்கு அந்த முக்கியமான அறிவு இல்லை. அவற்றை எப்படி உடைத்து நீர்நிலைகளைக் கையாளுவது என்றே அறிந்திருக்கிறோம். ஆகையால், நம் நிலத்தில் விளைபவற்றுக்கு அடுத்தவர்களிடம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்கிறோம்”

என மோசமாகப் போகும் நிலைபற்றி எச்சரிக்கிறார்.

நான் பன்னிரண்டாம் வகுப்புகூடத் தாண்டாத விவசாயி. எனக்கு வாய்ப்புகள் குறைவு. எனது மகன்கள் ஹம்சவர்த்தன் (13), ஆகாஷ் (11) இருவரும், ‘பணம் வேண்டுமென்றால் நாம் மதுரைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம்! என்கிறார்கள்’ என கவலையோடு சொல்கிறார்-கைகளை நடுமுதலைக்குளத்தின் பசுமையான வயல்களை நோக்கி… காற்றில் அசைத்தபடியே…

கட்டுரையாளர் அபர்ணா கார்த்திகேயன், பகுதிநேர எழுத்தாளர், தன்னார்வப் பணியாளர், PARI

https://ruralindiaonline.org/articles/where-farming-means-two-full-time-jobs/

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *