இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்பதை தவறாமல் அறிவிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், இதுபோன்று விவசாயிகளின் கடன்களை மாநில அரசே தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை கடுமையாக பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வறட்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாடு முழுவதிலிருந்தும் விவசாயிகள் அரசாங்கத்துக்குக் கோரிக்கை வைத்து வரும் இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கியின் இந்தக் கருத்து விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் இந்த அறிவிப்பால், அம்மாநில வருவாயில் ரூ.27,419.70 கோடி இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதுகுறித்து எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதால் வங்கிகளில் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.�,