தமிழகத்தில் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை என்ற நிலைக்குத் தள்ளப்படுவதால், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மே 19 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமாக தலைவர் வாசன் கூறுகையில்,’ தற்போதைய சூழலில் தமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கடந்த 2 மாதங்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலின்போதும் பன்னீர்செல்வம் அணியுடனே கூட்டணி தொடரும், அதிமுக-வின் இரு அணிகளும் கூட்டுக் குடும்பமாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
கிராமப்புற மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை. விவசாயக் கடன்களுக்காக வங்கிகள் விவசாயிகளை நெருக்குகிறது. மேலும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்து, நீர்பாசனத்திற்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
மேலும் ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம், மக்களின் மனநிலை புரிந்தவர் ரஜினி, எனவே அவர் கண்டிப்பாக சரியான முடிவையே எடுப்பார்’ என்று தெரிவித்தார்.�,