விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை இணையக்கூடிய பகுதியில் இந்த ஆண்டு எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். “விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் எல்லீஸ் சத்திரம், செஞ்சி கூட்ரோடு பகுதியில் இணைகிறது. இந்த பகுதியில் உரிய மேம்பாலங்கள், சிக்னல்கள் இல்லாததால் நாள்தோறும் விபத்துகள் நடக்கின்றன. ஒரு மாதத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழக்கின்றன” என்று மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது குறித்துப் பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று, அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் புழக்கத்தில் உள்ள இடத்தில் இதுபோல மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று விதி உள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அங்கு எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தார் சிவசண்முகம்.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று (அக்டோபர் 31) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை இணையக்கூடிய பகுதியில், நடப்பாண்டில் மட்டும் எத்தனை விபத்துகள் நடைபெற்றன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கை, வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,