^விளையாட்டுப் பொருள் விற்பனை சரிவு!

Published On:

| By Balaji

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, விளையாட்டுப் பொருட்கள் விற்பனை 60 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுக்கு 12 முதல் 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வர்த்தகக் கூட்டமைப்பு (TASGPEE) மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 67 உடற்பயிற்சி உபகரண சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் 250 உடற்பயிற்சி உபகரண வாடிக்கையாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், விற்பனை 60 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் 12 சதவிகித வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று விளையாட்டு உபகரண உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share