�விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைப்பது குறித்து 13 மாவட்ட விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்துக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் பூமிக்கடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3) சென்னை தலைமைச் செயலகத்தில் மின் துறை அமைச்சர் தங்கமணியுடன் 13 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இந்தியாவில் எங்கும் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்றும், பூமிக்கடியில் கேபிள் அமைக்க 10 மடங்கு செலவு ஆகும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தாகக் கூறினர் விவசாய பிரதிநிதிகள். “இந்தப் பேச்சுவார்த்தையில் திருப்தி அளிக்கவில்லை. விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.�,