இந்திய விவசாயிகள் தங்களது பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையைச் சரி வரப் பெறாமல் பாதிக்கப்படுவதாக மத்திய வேளாண் துறை அமைச்சரான ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ராதா மோகன் சிங் பதிலளிக்கையில், “எனது அனுபவத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை முறையாகப் பெறுவதாகத் தெரியவில்லை. டெல்லி முதல் கொல்கத்தா வரையிலான பகுதிகளில் நெல் விவசாயிகளுக்கான ஆதரவு விலை அவர்களைச் சென்று சேருவதில்லை. விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் நெல் மற்றும் கோதுமைக்கு மட்டுமல்லாமல் பிற பொருட்களுக்கும் கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயித்து அதன்படி வழங்கி வருகிறது.
விவசாயிகளின் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை விடச் சந்தை விற்பனை விலை குறைவாக இருந்தால் அப்பொருட்களை அரசே கொள்முதல் செய்யும். அரசு சார்பாக 8 லட்சம் டன் அளவிலான பருப்பு மற்றும் பருத்தி வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் கொள்முதல் விலை கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் தவிப்பதற்குத் தீர்வாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதி ஆயோக் அமைப்புடனும் மாநில அரசுகளுடனும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.�,