ஜனவரி 1ஆம் தேதி முதல் தனது கார்களின் விலையை 4 சதவிகிதம் வரையில் உயர்த்தப்போவதாக (BMW) பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ, இந்தியாவிலும் 2007ஆம் ஆண்டு முதலே தொழில் புரிந்து வருகிறது. சென்னையில் அமைத்துள்ள ஆலை வாயிலாகக் கார்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பி.எம்.டபிள்யூ. 3 சீரீஸ் முதல் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 வரையிலான ஏழு மாடல்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ஜனவரி 1 முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 4 சதவிகிதம் வரையில் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. விலை உயர்த்தப்படுவதற்கான காரணம் எதையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து *பி.எம்.டபிள்யூ.* இந்தியா நிறுவனத்தின் தலைவரான விக்ரம் பவா, *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “இந்தியாவில் நாங்கள் தொடர்ந்து சிறப்பான சேவை வழங்கி வருகிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தையும் விரிவான நிதித் தீர்வுகளையும் வழங்குகிறோம். ஜனவரி 1 முதல் கார்களின் விலை 4 சதவிகிதம் வரையில் உயர்த்தப்படுகிறது. மினி ரேஞ்ச் மற்றும் பி.எம்.டபிள்யூ. மோட்ராடு (இருசக்கர வாகனங்கள்) பிரிவுகளில் மட்டும் விலை உயர்த்தப்படாது” என்று தெரிவித்துள்ளார். விலை உயர்வு அறிவிப்பை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இதர நிறுவனங்களும் விலை உயர்வை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,