திமுகவின் முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவரான அன்பில் தர்மலிங்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையை இன்று (ஜூன் 10) திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என். நேருவோடு, அன்பில் தர்மலிங்கத்தின் பேரனான அன்பில் மகேஷ், ஸ்டாலினின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி மக்களவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசரும் கலந்துகொண்டார்.
உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி தர வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்கள் தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில், இன்றைய நிகழ்வில் உதயநிதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் உதயநிதி பெயரைச் சொல்லி முழக்கங்களும் எழுந்தன.
சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின்,
“அன்பிலார் சிலை அவரது ஊரில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. உங்களோடு இணைந்து நானும் பங்கேற்று திறந்து வைக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில் பூரித்து நிற்கிறேன். அன்பிலார் எப்படிப்பட்ட செயல் வீரராக, தளகர்த்தராக அனைத்துக் கட்சியினருக்கும் துணைநிற்கக் கூடியவகையில் தொண்டாற்றியவர். அதன் மூலம் கலைஞருக்குப் பெருமை சேர்த்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் உழைத்த உழைப்பு இன்றைக்கும் மறக்க முடியாத நிலையில், இன்று திருச்சி மாவட்டம் திமுக தீரர்களின் மாவட்டமாக விளங்குகிறது. அவர் வழி நின்று நாமும் நம் கடமையை ஆற்ற உறுதி எடுக்கும் நாளாக இந்த நாளைக் கருதி சபதமேற்போம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் அதைவிட பெரிய வெற்றியை பெற உறுதியேற்போம்” என்று பேசினார் ஸ்டாலின்.
இன்று மாலை திருச்சியில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார் ஸ்டாலின்.
�,