குறைவான கட்டணத்தில் ரயில்களில் புதிய மூன்றடுக்கு ஏசி சொகுசு பெட்டி வசதி விரைவில் வருகிறது என ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டிகளில் பயணிப்பதற்கு தற்போது வழக்கத்தில் உள்ள மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் வசூலிக்கப்படுகிற கட்டணத்தைவிட எட்டு சதவிகிதம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிகிறது.
பயணிகளுக்கு குறைவான கட்டணத்தில் சிறப்பான பயண அனுபவத்தை தருவதற்காக இந்த மலிவு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த மூன்றடுக்கு ஏசி சொகுசு வகுப்பு பெட்டிகளில் 83 படுக்கை வசதிகள் இருக்கும். மூன்று பக்கவாட்டு படுக்கைகள் இருக்கும்.
இந்தப் பெட்டிகள் மூன்று வாரங்கள் 180 கிமீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, பஞ்சாப்பின் கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையிடம் பெட்டிகளை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது.
இந்தப் பெட்டிகள் சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொருத்தப்படும். மேலும், அனைத்து பயணிகளும் பயணிக்க வேண்டும் என்பதால் இதன் பயண கட்டணமும் மலிவாக இருக்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
806 புதிய ஏசி மூன்றடுக்கு சொகுசு வகுப்பு பெட்டிகள் இந்த நிதியாண்டு அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என ரயில்வே தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,