விரக்தியின் உச்சத்தில் கமல் புலம்புகிறார்: முரசொலி!

Published On:

| By Balaji

விரக்தியின் உச்சக் கட்டத்தில் நின்று கமல்ஹாசன் புலம்பத் தொடங்கியுள்ளார் என்று திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுகவைவிட திமுகவையே கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிராம சபைக் கூட்டங்களை தன்னைப் பார்த்து திமுக காப்பியடிப்பதாகக் கூறியுள்ளார். சட்டசபைக்குச் சென்றால் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன்; அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியே வருவேன் எனவும் கூறி, திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாகச் சாடினார். கமலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புதுச்சேரியில் பதில் அளித்த ஸ்டாலின், தான் அரசியல் மட்டுமே பேசுவதாகத் தெரிவித்தார்.

கமல்ஹாசன்-ஸ்டாலின் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில் கமலின் அரசியல் அரைவேக்காட்டுத் தனம் என்ற தலைப்பில் இன்று (பிப்ரவரி 18) கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை வெளியிட்டுள்ளது முரசொலி.

அதில், ”கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலையில் உள்ளவன் எந்த நிலைக்கு ஆளாவானோ அந்த நிலையில் கமல்ஹாசன் நிதானமின்றிப் பிதற்றத் தொடங்கிவிட்டார். கமல் பேசுவது என்ன? ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியாது. கேட்போரைத்தான் சட்டையை கிழித்துக்கொள்ள வைப்பாரே தவிர அவர் ஒருநாளும் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும். கிராம சபைக் கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல்ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ”இந்த கிராம சபைக் கூட்டத்தை கலைஞர் முதல்வராக இருந்தபோதே தனது அமைச்சரைவையில் உள்ள அமைச்சர்களைக் கொண்டு நடத்தியுள்ளார். கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் அவர் ஏதாவது கதாநாயகியுடன் டூயட் பாடி ஆடிக்கொண்டிருந்திருப்பார். திமுக வரலாற்றை கமல்ஹாசன் படித்தறிய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அக்கட்டுரையில், முதலமைச்சர் கனவில் கட்சி ஆரம்பித்து, அதனைக் கொள்வாரில்லை என்பது தெரிந்துவிட்ட நிலையில், விரக்தியின் உச்சக் கட்டத்தில் நின்று கமல்ஹாசன் புலம்பத் தொடங்கியுள்ளார். தலைவர் ஸ்டாலின் மீது பாய்கிறார்; ரஜினி மீது விஷத்தைக் கக்குகிறார்; தன்னைத் தானே ‘சின்னப் பயல்’, ‘நேற்று வந்த பயல்’ எனக் கூறிக்கொள்கிறார் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

“அரசியல் கட்சி துவங்கி எதனை நோக்கிச் செல்கிறோம், பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச் செல்லப் போகிறோம் என்று தெளிவற்றுத் திரியும் கமல்ஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக்கூத்து” என்றும் கடுமையான பதிலை கமல்ஹாசனுக்கு முரசொலி நாளிதழ் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share