மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மேற்கொண்ட, புதிய கொள்கை முடிவின்படி நாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு விமான நிலையத்துக்கும், விமான நிலைய ஆலோசனைக் குழு என்ற அமைப்பு இயங்கும். பயணிகள்- விமானத் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பயணிகளுக்குத் தேவையான வசதிகள் உள்ளிட்டவற்றை இந்த விமான நிலைய ஆலோசனைக் குழு வழங்கும்.
விமான நிலையம் அமைந்திருக்கும் தொகுதியின் எம்.பி.தான் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். அதன்படி தமிழகத்தில் அமைந்திருக்கும் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களில் புதிதாக அமையவிருக்கும், விமான நிலைய ஆலோசனைக் குழுவுக்கு அந்தந்த தொகுதிகளின் திமுக எம்.பி.க்களே தலைவர்களாக இருப்பர்.
இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு விமான நிலைய இயக்குனர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் இது தொடர்பாக அத்தொகுதியின் புதிய எம்.பி.யான கனிமொழியை சந்தித்திருக்கிறார். விமான நிலைய மேலாளர் ஜெயராமனுடன் கனிமொழியை சந்தித்த விமான நிலைய இயக்குனர் ஒரு கடிதத்தையும் கனிமொழியிடம் வழங்கியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “இந்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவின்படி விமான நிலைய ஆலோசனைக் குழுவை தாங்கள் மறு சீரமைக்க வேண்டுகிறேன். விமானப் பயணிகள்- விமானத்துறை நல்லுறவு, விமானப் பயணத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்த தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் கடைசி கூட்டம் கடந்த 5.7.2017 அன்று நடந்திருக்கிறது. அதன்பின் அப்படி ஒரு கூட்டம் நடக்கவே இல்லை” என்பதை சுட்டிக் காட்டியிருக்கும் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர், புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் கூட்டத்தை ஜூலை மாதத்தில் நடத்திட ஆவன செய்யுமாறு கனிமொழி எம்.பி.யிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
2018 செப்டம்பரில் பாஜக தலைவர் தமிழிசையை எதிர்த்து விமானத்தில் ஆராய்ச்சி மாணவி கோஷமிட்டதாக ஒரு சர்ச்சை தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடித்தது. இதன் பிறகும் கூட தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு கூடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக முடிவின்படி தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுவுக்கு கனிமொழி எம்.பி. தலைவராக இருப்பார். தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர் மாற்றுத் தலைவராக இருப்பார்.
விமான நிலைய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக முறையே வணிகம், தொழில், போக்குவரத்துத் துறை சார்ந்த மூவரை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்து நியமிக்க வேண்டும். சமூக, அரசியல் தளங்களில் இருந்து முக்கியமான மூன்று உறுப்பினர்களை விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நியமித்திட வேண்டும்.
இதேபோல மேலும் மூன்று உறுப்பினர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார்கள். குழுவின் அமைப்பாளராக விமான நிலைய இயக்குனர் இருப்பார். சம்பந்தப்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஆலோசனைக் குழுவில் இடம்பெறுவர்.
தூத்துக்குடி விமான நிலைய இயக்குனரின் வேண்டுகோளை அடுத்து தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு விரைவில் சீரமைக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல தமிழகத்தின் மற்ற விமான நிலையங்களிலும், விமான நிலைய ஆலோசனைக் குழு அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு நினைத்தால் எதிர்க்கட்சியான திமுகவின் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் இந்த சட்ட ரீதியான உரிமையை தாமதப்படுத்தலாம். ஆனால், உடனடியாக கனிமொழிக்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம், திமுக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவமும் தெரிகிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
**
மேலும் படிக்க
**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
�,”