காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது தேவ் திரைப்படம். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆர்.ஜே.விக்னேஷ், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்பவர் தேவ் (கார்த்தி). சாகச ஆர்வம் கொண்ட இவர், மலையேற்றம், பைக் ரேஸ், புகைப்படக் கலை எனப் பல விஷயங்களைச் செய்கிறார். அதற்குத் தன் நண்பர்கள் விக்னேஷையும் அம்ருதாவையும் உடன் அழைத்துக்கொள்கிறார். பணத்தையும் புகழையும் குறிக்கோளாகக் கொண்டு நம்பர் ஒன் இடத்தில் எப்போதும் இருக்க முயற்சி செய்யும் பெண் மேக்னா (ரகுல்).
இருவரும் தங்கள் பாதையில் யாரையும் குறுக்கே வர அனுமதிக்காமல் பயணித்துக்கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக தேவ்வுக்கு மேக்னாவின் மேல் காதல் மலர்கிறது. ஆண்களையே வெறுக்கும் குணமுள்ள மேக்னா, தேவ்வின் காதலை ஏற்றுக்கொண்டாரா, வெவ்வேறு குணாம்சம் உள்ள இருவரும் இணைந்தார்களா என்ற கேள்விகளுக்கான பதிலாகத் திரைக்கதை பயணிக்கிறது.
படத்தின் திரைக்கதையை ஓரிரு வரிகளில் இப்படிச் சொல்ல முடிந்தாலும் சுவாரஸ்யமற்ற விதத்தில் இலக்கற்றுச் சுற்றி வரும் காட்சிகளைத் தொகுத்து இதுதான் கதை என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
கதை மாந்தர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்தான் திரைக்கதையை விறுவிறுப்பாக்கும். அப்படி எந்தப் பிரச்சினையும் நாயகனுக்கோ, நாயகிக்கோ பெரிய அளவில் வரவில்லை. இருவரும் வசதியான பின்னணியைச் சேர்ந்தவர்கள்; நினைத்த மாத்திரத்தில் உக்ரைன், சென்னை, மும்பை, இமயமலை எனச் சுற்றிவருகின்றனர். அதற்காக வேறு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதா என்ன? காதலுக்கோ, மற்ற எந்த முடிவுகளுக்கோ யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. காதலனின் குறிப்பிட்ட ஒரு செயல் பிடிக்கவில்லை எனச் சொல்லிப் பிற்பாதியில் ரகுல் எடுக்கும் முடிவும் பிரிவும் நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. பிரிவுக்கான காரணம் பொக்கையாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இமயமலையின் அழகு, உக்ரைன் நாட்டின் இரவு நேரக் காட்சிகள், பைக் பயணம், மலையேற்றம், கார் சேஸிங் காட்சிகள் என வேல்ராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகப் படம்பிடித்துள்ளது.
காட்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. கதை நகர்ந்தபாடில்லை. அங்கங்கே தென்படும் கதைக்கான கூறுகளையும் கதாபாத்திரங்களே கூட்டத்தைக் கூட்டி வசனங்களால் சொல்லி முடிக்கின்றன. ஆர்.ஜே.விக்னேஷ் எதற்காக ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கதையைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. காட்சிகளில் நேரடியாகப் பங்கேற்கும்போதும் தான் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதை அவர் நிரூபித்துக்கொண்டே உள்ளார்.
காட்சிகளும் கதாபாத்திரங்களும் ஏற்படுத்தாத உணர்வுகளை ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையின் மூலம் கொண்டுவர முயற்சி செய்கிறார். சோகம், மகிழ்ச்சி என்பதை இசையை வைத்துப் பார்வையாளர்கள் முடிவுசெய்து கொள்ளவேண்டிய அவலம் உள்ளது. காட்சிக்குப் பொருந்தாமல் வாசிக்கப்படும் இசை பார்வையாளர்களை மேலும் சோர்வடையச் செய்கிறது.
கார்த்திக்கு எந்தச் சவாலும் இல்லாத பாத்திரம். ஒப்பீட்டளவில் ரகுலுக்குச் சற்றே வலுவான பாத்திரம். பணக்காரத்தனத்தையும் அகந்தையின் விளிம்பைத் தொடும் தன்னம்பிக்கையையும், ஆண்கள் மீதான ஒவ்வாமையையும், காதலின் நெகிழ்வையும் கண்களிலும் உடல் மொழியிலும் ரகுல் நன்கு வெளிப்படுத்துகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலமான கூட்டணி உருவானபோதும் வலுவான திரைக்கதை இல்லாததால் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்களைக் கடக்க பார்வையாளர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.�,”