*விமர்சனம்: தடம்!

public

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் தடம். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தன்யா ஹோப், வித்யா பிரதீப், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

கவின், எழில் (அருண் விஜய்) இருவரும் ஒரே முகம், உடல் மொழி, குரல் உடைய இரட்டைப் பிறவிகள். எழில் பொறியாளராக வலம் வருகிறார். நிலையான வருமானம், அழகான காதல் என அவர் வாழ்க்கை நடைபோடுகிறது. கவின் எளிதில் யாரையும் ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கக் கூடியவர், சட்ட நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பவர். சேர்த்த பணம் அத்தனையையும் சூதாட்டத்தில் பறிகொடுக்கக்கூடியவர். அவர் நண்பர் யோகி பாபு.

இருவரது பின்னணியும் காட்டப்பட்டதைத் தொடர்ந்து ஓர் இளைஞர் கொலை செய்யப்படுகிறார். அதைச் செய்வது கவினா, எழிலா என பார்வையாளர்களுக்கே குழப்பம் ஏற்படுகிறது. விசாரணையில் காவல் துறையின் கையில் கொலையாளியின் புகைப்படம் கிடைத்துவிடுகிறது. இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். இருவரில் யார் கொலை செய்தது என்பது காவல் துறைக்குப் புரியாத புதிராக உள்ளது. கொலையைச் செய்தது யார் என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தார்களா, வழக்கு என்ன ஆனது, இருவரின் பின்னணி என்ன எனப் பல கேள்விகளுடன் சுவாரஸ்யமான முடிச்சுகள் விழுவதும் அதை அவிழ்ப்பதுமாகத் திரைக்கதை பயணிக்கிறது.

வெவ்வேறு குணாம்சம் உள்ள இரு கதாபாத்திரங்கள், பல்வேறு உணர்வு நிலைகள் எனப் பல சவால்கள் இருந்தாலும் அருண் விஜய் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மூன்று நாயகிகள் இருந்தாலும் உதவி ஆய்வாளராக வரும் வித்யா பிரதீப்புக்கே அதிக காட்சிகள் அமைந்துள்ளன. குழப்பமும், குற்றவாளியைச் சரியாக அடையாளம் காண வேண்டும் என்ற பதற்றமும் இயல்பாய் அவரது நடிப்பில் பிரதிபலித்துள்ளன.

தன்யா ஹோப்புடனான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. யோகி பாபுவுக்குக் குறைவான காட்சிகள் என்றாலும் கவனம் ஈர்க்கிறார். காவல் ஆய்வாளராக நடித்துள்ள பெப்சி விஜயன், தலைமைக் காவலராக நடித்தவர் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கான சரியான தேர்வு.

அச்சு அசலாக ஒரே உருவம், குரல், உடல் மொழி உள்ள இரு கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் பலமுறை தோன்றியுள்ளன. அதன் அடிநாதமாக ஆள் மாறாட்டம்தான் இருக்கும். ஆனால், இதில் ஆள் மாறாட்டம் நடக்காமல் கடைசி வரை த்ரில் உணர்வைக் கடத்தியுள்ளனர். இருவிதமான வாழ்க்கைப் பின்னணிகளைக் காட்சிப்படுத்தும்போது நுட்பமாகச் செயல்பட்டுள்ளனர் படக் குழுவினர்.

திரைக்கதையில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டிருந்தாலும் கதையைக் குழப்பமில்லாமல் கூறியிருக்க முடியாது. ஆனால், சுவாரஸ்யம் இறுதிவரை குறையாமல் அதே நேரத்தில் தெளிவாகத் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். ஆக்‌ஷன் காட்சிகள், காதல், அம்மா சென்டிமென்ட் என கமர்ஷியல் சினிமாவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் இவை அத்தனையும் ஃபார்முலாவுக்காகச் செருகப்பட்டதாக அல்லாமல் கதைக்கான தேவையாகவே உள்ளன. பிளாஷ்பேக்கில் வரும் சோனியா அகர்வாலின் கதாபாத்திரம் செயற்கையாக இருப்பது சற்று உறுத்தல்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு அழகூட்ட, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வில்லாமல் எடுத்துச் செல்கிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் கதை சொல்லும் முறை, பட உருவாக்கம் ஆகியவற்றில் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல் செய்யப்பட்ட மாற்றங்கள் இயல்பாய் அமைந்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் த்ரில் உணர்வுடன் அடுத்து என்ன என்ற ஆவலைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது இந்தத் தடம்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.