அறிமுக இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே இணைந்து நடித்திருக்கும் படம் சத்ரு. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.டி.இனிஃபினிட்டி டீல் நிறுவனம் தயாரித்துள்ளது.
உயர் அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயப்படாமல் தவறு என்றால் துணிந்து குற்றவாளிகளைத் தண்டிப்பவர் உதவி ஆய்வாளர் கதிரேசன் (கதிர்). குழந்தைகளைக் கடத்தி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பலைப் பிடிக்க முயற்சிக்கும் போது, வில்லன் கூட்டத்தில் ஒருவரை என்கவுண்டர் செய்கிறார். அதனால் வில்லன் கூட்டம் கதிரையும் கதிர் குடும்பத்தையும் பழிவாங்குவதும் அதை தடுக்க கதிர் முயற்சிப்பதும் தான் ‘சத்ரு’.
மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள் என வலம் வந்த கதிர் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் பொருந்திப் போகிறார். ஆனால் தன்னைச் சார்ந்தவர்களை இழக்கும் போது கூட எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கடந்து போகிறார். குற்றவாளிகளை அடித்தே ஒத்துக்கொள்ள வைப்பதும், கையில் சிக்கிய குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவதையும் கடந்து அறிவுப்பூர்வமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவராக காட்டப்படவில்லை.
வழக்கமான தமிழ் சினிமா போலீஸ் நாயகர்களின் வார்ப்பாகவே கதிர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. வில்லன் கும்பலால் போலீஸ் நாயகனுக்கு வழக்கமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள், அதை அவன் சமாளிக்கும் முறைகள் ஆகியவை ஏற்கெனவே பார்த்து சலித்த காட்சிகள். கதிர் கதாபாத்திரத்தின் அவசரம் தான் படத்தின் இரண்டாம் வில்லனாக இருக்கமுடியும். கெத்து காட்டுவதற்காக நெற்றிப் பொட்டில் சுட்டு என்கவுண்டர் செய்வதாலே பிரச்சினை பெரிதாகிறது.
கதாநாயகனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் இழப்பின் மேல் கவனம் செலுத்தப்படும் அளவுக்கு பிறரின் இழப்புகளுக்கு அதனால் ஏற்படும் வலிகளை போகிறபோக்கில் கூட கவனப்படுத்த இயக்குநர் தவறுகிறார். வசதி படைத்த தம்பதியரை மிரட்டுவதற்காக ஏழை தம்பதியரின் மகனைக் கொலை செய்வது, நீலிமாவை குத்த வரும்போது அது அவரது அருகில் உள்ளவரை பதம் பார்ப்பது போன்ற காட்சிகளில் பாதிக்கப்படுவோர் பொருட்படுத்தப்படுவதில்லை.
வில்லனாக நடித்துள்ள லகுபரன் கவனம் ஈர்க்கிறார். படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே என்றாலும் அவருக்கான முக்கியத்துவம் எந்தக் காட்சியிலும் இல்லை. சுஜா வருணி தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். நீலிமா, பவன், மாரிமுத்து, பொன்வண்ணன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு காட்சிகளை உண்மைக்கு நெருக்கமாக படம் பிடித்தது போன்ற உணர்வைத் தருகிறது. பாடல்கள் இல்லாமல் பின்னணி இசை மூலம் அம்ரீஷ் கனேஷ் கவர்கிறார். வில்லன் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட தீம் மியூசிக் ரசிக்கும் படியாக இருந்தாலும் பல முறை பயன்படுத்தப்பட்டது சலிப்பைத் தருகிறது.
குழந்தைக் கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்த பின்னணி தெளிவாக இல்லை. அவர்களது குறிக்கோளும் தெளிவாக காட்டப்படவில்லை. பாடல்கள், காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் போன்றவற்றை திரைக்கதைக்குள் அனுமதித்துவிடக்கூடாது என்பதில் கறாராக இருந்துள்ள இயக்குநர் கதை உருவாக்கத்திலும் சுவாரஸ்யமான, நுட்பமான விஷயங்களை திரைக்கதையில் சேர்ப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
�,”