ஒரு ஜாலி கூர்காவும் சோம்பேறி நாயும் இணைந்து ஹை-ஜாக் செய்யப்பட்ட வணிக வளாகத்தை மீட்க நடத்தும் காமெடி போராட்டமே கூர்கா.
கூர்கா வம்சாவளியைச் சேர்ந்த யோகி பாபு, காவல் துறையில் சேர முயற்சித்தும் பயணளிக்கவில்லை. இதனால் செக்யூரிட்டி சர்வீசில் இணையும் யோகி பாபு, ஒரு அபார்ட்மெண்ட்டில் பணிக்கு அனுப்பப்படுகிறார். சேர்ந்த அன்றே அமெரிக்கதூதரான எலிசா மீது காதல் வலையில் விழுகிறார். ஆனால், எலிசாவை நெருங்குவது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த நிலையில், எலிசா அடிக்கடி செல்லும் வணிக வளாகத்திற்கு யோகி பாபு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.
ஓர் இரவு எலிசாவை குறிவைத்து தீவிரவாதிகள் அந்த வணிகவளாகத்தை ஹை-ஜாக் செய்கிறார்கள். அப்பாவி மக்களும் நாயகனின் அமெரிக்க காதலியும் பிணையக் கைதிகளாக சிக்கிக்கொள்கிறார்கள். தீவிரவாதிகள் எலிசாவை ஏன் குறிவைக்க வேண்டும்? அவர்கள் நோக்கம் என்ன? யோகி பாபு தன் காதலியையும் மக்களையும் மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
இவ்வருடம் அதர்வா நடிப்பில் வெளியான ‘100’ படத்தை தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளிவரும் மற்றொரு படமிதுவாகும். தர்ம பிரபு படத்திற்கு பிறகு யோகி பாபு நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம். எலிசா, சார்லி, ரவி மரியா, ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், லிவிங்க்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை ராஜ் ஆர்யன், ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த். 4 மன்கீஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
கதையின் போக்கில் நகைச்சுவையை கொண்டு செல்வது ஒரு ரகம். நகைச்சுவைக்காகவே கதையின் போக்கை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்வது மற்றொரு ரகம். இதில் கூர்கா இரண்டாவது. முழுக்க நகைச்சுவையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறது படக்குழு. அதனால் கதையில் நம்பகத்தன்மை, சின்ன சின்ன லாஜிக் ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து விட்டார்கள்.
கூர்காவில் படம் முழுக்க வலம் வரும் யோகி பாபுவின் உடல் மொழியும், எல்லோரையும் கலாய்க்கும் தன்மையும் அவரது கதாபாத்திரத்திற்கு சரியாகவே பொருந்துகிறது. செக்யூரிட்டி நண்பனாக வரும் சார்லியின் நடிப்பும் பொருத்தம். ஒரு சில காட்சிகளில் அழகாக வொர்க்-அவுட் ஆகும் காமெடி, பல இடங்களில் எவ்வித உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது.
முதல் பாதியில் கதைக்குள் வர தாமதாகும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகமெடுக்கத் துவங்குகிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் இணையும் நாயும், இருவரும் சேர்ந்து போடும் திட்டமும் அவ்வபோது சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனாலும், படத்தில் பாதிக்கும் மேல் வலிந்து திணித்த காமெடியாகவே இருக்கின்றது. வலுக்கட்டாயமாக சிரித்தே ஆக வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். காமெடி என்ற பெயரில் வழக்கமான சோஷியல் மீடியா, டிரெண்டிங், வைரலான விஷயங்கள் என அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கிறார்கள். அதிலும் நாடே பதறிய ஸ்டெர்லைட் படுகொலையை கூட காமெடிக்காக பயண்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநருக்கு எல்லாமே காமெடிக்கான கண்டெண்ட் போலும்.
ராஜ் ஆர்யன் இசையில் ஜி.வி. பிரகாஷ் பாடும் பாடல் ரசிக்கவைக்கிறது. பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகவே இருக்கும் படத்தில் ஒளிப்பதிவு கவனிக்கும் படி உள்ளது. ஆரம்பகட்ட காட்சிகளில் படத்தொகுப்பு இன்னும் வேகமெடுத்திருக்கலாம்.
வழக்கமான நகைச்சுவை காட்சிகள், புதுமையற்ற திரைக்கதையால் கூர்கா ஏமாற்றமளிக்கிறது.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”