சாலையில் செல்லும் போது சக மனிதர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் கூட, போலீசாரின் தொல்லை மற்றும் தேவையில்லாத அலைக்கழிப்புகளுக்கு பயந்து யாராவது அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து நகர்ந்து விடுவதே வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ‘சேவ் லைப் பவுண்டேஷன்’ என்ற, தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்கள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்றால் தேவையில்லாத வழக்குகள், பிரச்சனைகள் ஏதேனும் வருமோ என்று, இனி அச்சமடையத் தேவையில்லை.
நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய அரசின் பரிந்துரைகளில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் செல்பவர்களை எந்த வழக்குகளுக்கும் ஆளாக்கக் கூடாது, உதவி செய்ய வருபவர்களை சாட்சிகளாகும்படி கட்டாயப்படுத்தக் கூடாது, தாங்களாக முன்வந்தால் மட்டுமே, அவர்களை சாட்சிகளாக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியோரை காப்பாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு, அவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பவரை, உடனடியாக அங்கிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும்; அவர்களிடம், மருத்துவமனைகள் கட்டணம் ஏதும் கேட்கக் கூடாது என்றும் இந்த விதிகளை மீறும் போலீசார் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.�,