வினாத்தாள் தயாரிப்பிற்கு தற்காலிக பேராசிரியர்களின் உதவியை நாடுமாறு முழு நேர பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017-18ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் தற்காலிக பேராசிரியர்கள் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 37 தற்காலிக பேராசிரியர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 250 ஒப்பந்த பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களை தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
இந்நிலையில், ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பருவத் தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 40க்கும் மேற்பட்ட பாடங்களை தற்காலிக பேராசிரியர்கள்தான் நடத்தி வருகின்றனர். தற்போது, வினாத்தாள் தயாரிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட பாடங்களை நடத்தாத முழு நேர பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டதால், வினாத்தாள்களை தயாரிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வினாத்தாள் தயாரிக்கும் பணியை விரைவில் முடிக்க, தங்களுக்கு கீழ் இருக்கும் நம்பகமான தற்காலிக பேராசிரியர்களின் உதவியை நாட பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
முறைகேட்டை தடுக்கும் வகையில் தற்காலிக பேராசிரியர்களை தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என முடிவு செய்துவிட்டு, தற்போது வினாத்தாள் தயாரிப்பதற்கு அவர்களின் உதவியை நாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.�,