விண்வெளிக் குப்பை: நாசாவுக்கு இந்திய விஞ்ஞானிகள் பதில்!

Published On:

| By Balaji

விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏ-சாட் ஏவுகணை சோதனையை அண்மையில் இந்தியா வெற்றிகரமாக முடித்தது. இந்த அறிவிப்பை மார்ச் 27ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த ஏவுகணை சோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்த சோதனையை மேற்கொண்ட நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துவந்த நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து நாசா நிர்வாகி ஜிம் ப்ரிடென்ஸ்டைன் பேசுகையில், “இந்தியா சோதனை நடத்திய பிறகு சுற்றுவட்டப் பாதையில் 400 சிதைவுத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 60 துண்டுகளை தற்போது கண்காணித்து வருகிறோம். இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான அபாயம் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தரப்பின் கருத்துகள் குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “இது ஒரு யூகம்தான். இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்கர்கள் இப்படித்தான் கையாளுவார்கள். ஏ-சாட் ஏவுகணை சோதனையைப் பொறுத்தவரையில், இந்தச் சிதைவுகளால் நீண்டகாலத்துக்கு விண்வெளியில் இருக்க முடியாது. சக்தியில்லாமல் பூமியில் விழுந்து எரிந்துவிடும். விண்வெளியில் லட்சக்கணக்கான சிதைவுகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுள்ளது?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

டிஆர்டிஓ அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி ரவி குப்தா பேசுகையில், “நாசா தலைவரின் கருத்துகள் பாகுபாட்டுடனும், பொறுப்பில்லாமலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சோதனை 300 கிலோமீட்டர் உயரத்தில் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் அதைவிட மிக அதிக உயரத்தில் உள்ளது. சிதைவுகள் அனைத்தும் சக்தியும், உத்வேகமும் இல்லாமல் கீழே விழுந்துவிடும். அமெரிக்கா நம்மை குற்றம்சாட்டுகிறது. ஆனால் அமெரிக்காவே இதே சோதனையைப் பலமுறை மேற்கொண்டுள்ளது. இதனால் ஏராளமான சிதைவுகள் விண்வெளியில் உருவாகியுள்ளன. இதேபோல ரஷ்யா, சீனாவும் சோதனை மேற்கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share