தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மத்தியப் பணியாளர் துறையானது, மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு எதிரான புகார்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையிலான மோதலையடுத்து, சிபிஐ மீதான ஊழல் புகார்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு செய்யுமாறு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு எதிரான புகார்களை விசாரிப்பது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ளது மத்தியப் பணியாளர் நலத் துறை.
சஞ்சீவ் சதுர்வேதி என்ற அரசு அதிகாரி, கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவர் செயலகத்துக்கு மனுவொன்றை அளித்திருந்தார். மத்திய ஊழல் தடுப்பு ஆணையரின் தவறான நடத்தைத் தொடர்பான புகார்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் பரிந்துரைக்குமாறு மத்திய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் பிரிவு 6இல் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி விளக்கம் கேட்டிருந்தார். எய்ம்ஸ் அமைப்பின் மூத்த அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான வழக்கு கோப்புகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மூடிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கே.வி.சவுத்ரி, தற்போது மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக உள்ளார். இவர் சம்பந்தப்பட்ட ஏழு வழக்குகளின் விவரங்களையும், சதுர்வேதி தனது மனுவில் இணைத்திருந்தார். இது தொடர்பாக விவரங்களை அளிக்குமாறு, கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் அலுவலகமானது மத்தியப் பணியாளர் துறைக்கு உத்தரவிட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பணியாளர் அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு எதிரான புகார்களை விசாரிக்க வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இதுவரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நடைமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட, எய்ம்ஸின் தலைமை ஊழல் தடுப்பு அலுவலராகப் பணியாற்றியவர் கே.வி.சவுத்ரி. 2012 ஜூலை மாதம் முதல் 2014 ஆகஸ்ட் மாதம் வரை, இவர் அப்பணியில் இருந்தார்.�,