தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார். விரைவில் நடைபெறும் மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தேமுதிக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது முறையான அனுமதி வாங்காமல் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறி எல்.கே.சுதிஷ் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதுதொடர்பான, வழக்கில் திருச்சி ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பன் முன்பு எல்.கே.சுதிஷ் நேற்று (செப்டம்பர் 11) ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே.சுதிஷ், “போலீஸார் என் மீது பொய்யான வழக்கைத் தொடர்ந்துள்ளனர். அதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார். விரைவில் கட்சியின் மாநாடு அறிவிக்கப்படவுள்ளது. அதில் விஜயகாந்த் உரையாற்றுவார். தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுகுறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.�,